சுடச்சுட

  

  பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் புதிய பிரிவு

  By DIN  |   Published on : 17th March 2019 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் புதிய பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இக்குற்றங்கள் சமூகத்தில் பெரும் தீங்கை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. இதை உணர்ந்த தமிழக காவல்துறை, இந்த வகை குற்றங்களைத் தடுக்க புதிய பிரிவை தொடங்க முடிவு செய்தது. அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இப் பிரிவுக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்பிரிவின் தலைமை அதிகாரியாக ஏடிஜிபி அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிரிவு, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படும் என கூறப்படுகிறது.
   மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால், மிகவும் எளிமையான முறையில் இப்பிரிவு தொடங்கி வைக்கப்படும் என தமிழகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ், தமிழகக் காவல்துறையில் ஏற்கெனவே உள்ள, அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, உள்ளிட்ட சில பிரிவுகளும் கொண்டு வரப்படுகின்றன. மாநிலம் முழுவதும் செயல்படும் 201 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இந்தப் புதிய பிரிவின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதேபோல, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவுகள் சென்னை, வேலூர், விழுப்புரம், தருமபுரி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவுகளும் புதிய விசாரணை அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு சென்னையில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
   டிஜிபி அளவிலான அதிகாரி: டிஜிபி அளவிலான அதிகாரி இப் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக இருப்பார். அவருக்கு கீழ், ஏடிஜிபி அளவிலான அதிகாரியும், இதற்கு கீழே 2 காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதில், ஒரு காவல் கண்காணிப்பாளரின் கீழ், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய மாநகர காவல்துறைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
   மற்றொரு காவல் கண்காணிப்பாளரின் கீழ், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகர காவல்துறை செயல்படும். இதைப்போல, சென்னை பெருநகர காவல்துறைக்கு தனியாக ஒரு துணை ஆணையர் நியமிக்கப்படுவார்.
   இதற்கான பணியிடங்களை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளரின் கீழ் இப் பிரிவினர், காவல் கண்காணிப்பாளரின் கீழ் செயல்படுவார்கள்.
   பணிகள்: இந்தப் பிரிவினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், திராவகம் வீச்சு, கௌரவ கொலைகள், தற்கொலை, கடத்தல், வரதட்சிணைக் கொடுமை, கருக்கொலை உள்ளிட்டவற்றை பிரதானமாகக் கொண்டு இயங்கும் என தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. இந்தப் பிரிவுக்காக, குற்ற வழக்குகளிலும், பெண்கள், குழந்தைகள் வழக்குகளிலும் திறமைமிக்க அதிகாரிகளையும், காவலர்களையும், அதிகாரிகள் கண்டறிந்து தேர்வு செய்து வருகின்றனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai