சுடச்சுட

  

  பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ

  By  திருச்சி,  |   Published on : 17th March 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  LAW

  பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ தெரிவித்தார்.
   தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் 2013-ஆம் ஆண்டில் சேர்ந்து 2018-இல் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை நடந்த முதலாவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி நீதிபதி வி.கே. தஹில ராமாணீ பேசியது:
   தமிழகத்தில் தரமான சட்டக் கல்வியை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம் கொண்டுவரப்பட்டது. இப்போது, இந்த நிறுவனத்துக்கு பல்கலைக் கழக மானிய நிதிக் குழு, பார் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு நிதி நல்கை குழுக்களின் மூலம் மானியங்கள் பெற்று கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
   கல்வி என்பது வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பாடங்களை மட்டுமே தேர்வு செய்து வந்த மாணவர்கள் மத்தியில், சட்டக் கல்வியை தேர்வு செய்வதிலும் ஆர்வம் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக மாணவிகள் அதிகளவில் சட்டம் பயில வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
   மாணவர்கள் சுயநலத்துடன் சிந்திப்பவர்களாக இல்லாமல் தங்களது வளர்ச்சிக்கு பின்புலமாகவும், பல தியாகங்கள் செய்திடும் பெற்றோரை மரியாதையாக நடத்திட வேண்டும். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றத்தில் 2 பெண் நீதிபதிகளும், 3 பெண்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகவும் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 10 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
   நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 670 நீதிபதிகளில் 73 பேர் பெண்களாக உள்ளனர். பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் சட்டக் கல்வி பயிலவும், ஆசிரியராகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும்.
   இளம் வழக்குரைஞர்களும், சட்டம் பயிலும் மாணவர்களும் சமூக மாற்றத்துக்காக பணியாற்ற வேண்டும். குடிமக்களின் உரிமைகள் எது, கடமை எது என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சட்டக் கல்லூரி மாணவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.
   விழாவில், பல்கலைக்கழக தேர்வுகள் பொறுப்பாளர் எஸ். அமிர்தலிங்கம், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய நாராயணன், சட்டத்துறை செயலர் எஸ். பூவலிங்கம், நீதிபதி டி.எஸ். சிவஞானம், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் சத்தியபார்வதி, இனியா ஆகிய இருவர் அதிக மதிப்பெண்கள் வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai