சுடச்சுட

  

  பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம்: சமூக ஊடகங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

  By DIN  |   Published on : 17th March 2019 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக விடியோக்கள்,புகைப்படங்களை பதிவிடுவதைத் தடுக்க வேண்டுமென, சமூக ஊடக நிர்வாகங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது.
   இது குறித்த விவரம்:
   முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருக்கும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை குறி வைத்து கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கும்பல் நெருங்கிப் பழகி, தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து, செல்லிடப்பேசியில் விடியோ காட்சிகளாகப்பதிவு செய்து மிரட்டினர். அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், அண்மையில் பொள்ளாச்சி
   கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பொள்ளாச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச விடியோ எடுத்து வைத்திருப்பதும், அந்த ஆபாச விடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, பெண்களை போலீஸாரிடம் புகார் அளிக்க விடாமல் தடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை, சில நாட்களுக்கு முன்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
   சமூக ஊடகங்களுக்கு கடிதம்: இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் திருநாவுக்கரசை, சிபிசிஐடி அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்தக் கும்பலால் எடுக்கப்பட்ட ஆபாச விடியோ, புகைப்படங்கள், முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவுவதாகக் கூறப்படுகிறது.
   இந்த விடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக ஊடங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள், முகநூல்,கட்செவி அஞ்சல், சுட்டுரை ஆகிய அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே பதிவிடப்பட்ட விடியோ, புகைப்படங்களை அழிக்க வேண்டும்.
   இனிமேல், அந்த விடியோ, புகைப்படங்களை பதிவிட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதில் அறிவுறுத்தியுள்ளனர். இந்த, எச்சரிக்கையையும் மீறி, சமூக ஊடகங்களில் விடியோ, புகைப்படங்களை பதிவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai