சுடச்சுட

  

  வேட்புமனு தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

  By DIN  |   Published on : 17th March 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ss

  வேட்புமனு தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தலைமை தேர்தல் அதிகாரி சனிக்கிழமை அறிவித்தார்.
   இதுகுறித்து, அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுடன், வேட்பு மனு தாக்கல் தொடர்பான விதிமுறைகள் குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பியுள்ள அறிவிப்பின் விவரம்:
   மக்களவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர் ரூ.25 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியில் ரூ.12, 500-ம் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்கு, வேட்புமனு தாக்கல் செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தில் செல்ல வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். வேட்புமனு படிவத்தை அளிக்க, வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அல்லது அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும் வாகனங்கள், நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, காவல் துறையினரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளலாம்.
   விடியோ படம் எடுக்கப்படும்: வேட்புமனு தாக்கலின் போது அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்யப்படும். குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களுக்குள் வரும் வாகனங்கள் முதல், வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நடவடிக்கைகள் வரை, அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படும் . அதிகளவிலான கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எடுக்கலாம். இதில், ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
   வேட்புமனு எப்போது: மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் ஏப். 18 -இல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட மார்ச் 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 29 கடைசி நாள். இதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai