சுடச்சுட

  

  பொள்ளாச்சி விவகாரத்தில்  நீதிமன்றத்தின் நேரடிப் பொறுப்பில் துரித விசாரணை: இந்தியக் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் 

  By DIN  |   Published on : 17th March 2019 04:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mutharasan

   

  சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில்  நீதிமன்றத்தின் நேரடிப் பொறுப்பில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

  இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம், 15.03.2019 அன்று திருவாரூரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், கே.சுப்பராயன், செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி, நா.பெரியசாமி, டி.எம்.மூர்த்தி,  பி.பத்மாவதி, எம்.ஆறுமுகம் உள்ளிட்ட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தொடர் பாலியல் வன்முறை, தமிழகத்திலும் அதன் எல்லைகளைத் தாண்டியும் மனித சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது.

  அதிகார பலம், பண பலம் ஆகிய இரண்டுக்கும் ஆதாரமான அரசியல் தொடர்பும் இல்லாமல் ஏழு ஆண்டுகளாக, 300 க்கும் மேற்பட்ட பெண்கள் மீது இத்தாக்குதல்கள் வெளியில் தெரியாமல் நடந்திருக்க முடியாது.

  அரசியலுக்கும், இக்கொடுமைகளுக்கும் தொடர்பில்லை என, விசாரணை நடக்கும் முன்பாகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிக்கைகளுக்கு பேட்டிதந்திருப்பது, இக்குற்றத்தின் பின் உள்ள அரசியலின் ஆழத்தை மெய்ப்பிக்கிறது. சட்டவிரோதமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அவர் வெளியிட்டதும், அரசாணையிலேயே அப்பெண்ணின் பெயர் இருப்பதும் கடும் கண்டனத்துக்குரியவையாகும். இதற்கு காரணமான காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  அப்பெண்களை மிரட்டுவதற்காக பாலியல் வன்முறைகளை வீடியோ எடுத்து, பத்திரப்படுத்தப்பட்ட காட்சிகள் சில வெளிவந்துள்ளன. ஏற்கனவே பலருடன் இதுபோன்ற பல வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு இருக்கலாம். எனவே முகநூல் (FACEBOOK) வாட்ஸ்ஆப் (WHATAPP) நிறுவனங்களிடம் உள்ள பொள்ளாச்சி நிகழ்வுகள் சம்பந்தமாகப் பதிவேற்றப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவும், வளைத்தளத்திலிருந்து நீக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நடந்ததை வெளியில் சொன்னால், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகப் பார்க்கிற சமூகத் தலைமுறை இருந்தாலும், அதனை மீறி புகார் தந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும், பாராட்டுக்குரியவர்கள் ஆவர். இவர்களுக்கும், இவரைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனை தந்து ஆற்றுப்படுத்துவதற்கு, இத்துறையில் தேர்ந்த மருத்துவர்கள், வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதனால் நிகழ்த்தப்பட்ட குற்றமும் முழுமையாக பதிவாக வேண்டும்.

  இந்தக் குற்றத்தின் பின்னணியில், முக்கிய அரசுப் பொறுப்புகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் உள்ளனர். ஆளும் கட்சியின் அழுத்தத்தினால்தான் இத்தனை ஆண்டுகளாக இக்கொடுமை தொடர்ந்துள்ளது. புகார் வந்த பின்பும், அவசர அவசரமாக இதனை மூடி மறைக்கவும், வேறுயாரும் புகார் தர வந்துவிடக் கூடாது என்று அச்சுறுத்தவதற்காக சட்ட விரோதமாக பெயர்களையும், காட்சிகளையும் காவல்துறை வெளியிடுவதும் அதிகார வன்முறையாகும். தனது ஆட்சியை நீட்டிக்க உதவியாக உள்ள யாரொருவரையும், அவர் என்ன குற்றம் செய்தாலும் பாதுகாக்க அஇஅதிமுக அரசு தயாராக இருப்பது அதன் கையாலாகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக ஆளுமையை அக்கட்சி இழந்து விட்டது. இதற்கான தண்டனையை அக்கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் வழங்கியே தீருவார்கள்.

  மாநில அரசு விசாரணையிலிருந்து, மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய, புலனாய்வுத்துறை, மத்திய அரசின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கானதாக ஏற்கனவே வெளிப்படையாக மாற்றப்பட்டு விட்டதால், அரசியல் பின்னணி கொண்ட இந்தக் கொடூர நிகழ்வுகளில் முழு உண்மையை அது வெளிச்சத்திக்கு கொண்டு வராது என்று உணரப்படுகிறது. எனவே நீதிமன்றத்தின் நேரடிப் பொறுப்பில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது. 

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai