மத்தியில் தாமரை மலரும், கட்சி அறிவித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: தமிழிசை சௌந்தரராஜன்

கட்சி அறிவித்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மத்தியில் தாமரை மலரும், கட்சி அறிவித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கட்சி அறிவித்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சி எந்த தொகுதியை சொல்கிறதோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. எனவே இன்று அல்லது நாளை காலை பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமராக்குவோம் என்கிறார். ஆனால் தமிழகத்துக்கு வெளியே ராகுலை பிரதமராக்குவோம் என்று எங்கும் கூறவில்லை. அதேபோன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி வருகிறார். இவை இரண்டும் நடக்காது. 

பாஜக மாநிலத் தலைவர் எனும் முறையில் வேட்பாளர் தேர்வில் சில பரிந்துரைகளை அளிப்பேன். அதுகுறித்த முடிவுகளை கட்சி மேலிடம் எடுக்கும். அகில இந்திய அளவில் ஒரே சின்னம் கொண்ட கட்சி பாஜக. எனவே சின்னத்துக்கு சின்ன பிரச்னை கூட ஏற்படாது. அதேபோன்று உலக அளவில் 11 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியும் பாஜக தான். 

பிரதமர் நரேந்திர மோடி சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் பலத்துடன் இருக்கிறார். சமூக ஊடகங்களை பிரதமர் மோடி நேர்மறையாக பயன்படுத்தி வருபவர். ஆனால், தற்போது பல கட்சியினர் அதனை தவறாக பயன்படுத்துகிறார்கள். விமர்சனங்கள் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.

சிறப்பான கூட்டணி, சிறப்பான தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் சிறப்பான முடிவு அமையும். மத்தியில் தாமரை மலரும், மாநிலத்தில் இரட்டை இலை பலம்பெறும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com