ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! சந்தர்ப்பவாத கூட்டணிகளின் வரலாறு

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுவது என்பது இன்றியமையாததாக மாறிவிட்டிருக்கிறது.
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! சந்தர்ப்பவாத கூட்டணிகளின் வரலாறு

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுவது என்பது இன்றியமையாததாக மாறிவிட்டிருக்கிறது. 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு வரை திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தனியாகவே  வெற்றி பெறும் என்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளும் அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்புகளும் இப்போது கூட்டணிகள் அமைந்ததைத் தொடர்ந்து பழங்கதையாகி விட்டிருக்கின்றன. 

தமிழகத்தைப் பொருத்தவரை, கூட்டணி பலமில்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்கிற நிலை கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே பல்வேறு தேர்தல்களில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2014-இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டபோது, 37 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தனித்துப்போட்டியிட்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய வரலாறு 1962-இல் காமராஜர் தலைமையிலான காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு 2014-இல்தான் சாத்தியமாகியது. 

1962 தேர்தலின்போதேகூட, காங்கிரஸுக்கு எதிரான மறைமுகமானக் கூட்டணியை ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திராக் கட்சியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலான பார்வர்ட் கட்சியும் திமுகவுடன் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. கூட்டணி கலாசாரம் என்பதை அதிகாரபூர்வமாக தமிழகத்தில் ஏற்படுத்தியது 1967-ஆம் ஆண்டில் நடந்த நான்காவது பொதுத்தேர்தல்தான். கொள்கை முரண்பாடுகளை ஓரங்கட்டிவிட்டு, ஒன்றுக்கொன்று முரண்பட்ட  திமுக, சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸை வீழ்த்துவதற்குத் தொகுதி உடன்பாடு என்கிற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டன. 

ஒன்றுக்கொன்று முரண்பட்ட கட்சிகள் ஏற்படுத்திய அந்தக் கூட்டணி, காங்கிரஸை வீழ்த்தியது என்பது மட்டுமல்லாமல், அந்தக் கூட்டணி 36 தொகுதிகளில் 33 இடங்களைக் கைப்பற்றியது. தமிழக சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பலமான அரசியல் சக்தியாக தலையெடுக்கவே முடியாத அரசியல் திருப்பத்தை 1967-இல் அமைந்த கூட்டணி ஏற்படுத்தியது. இப்போது பரவலாக விமர்சிக்கப்படும் கூட்டணி சந்தர்ப்பவாதத்துக்கு பிள்ளையார் சுழி அந்தத் தேர்தலில்தான் ஏற்படுத்தப்பட்டது.

1967-க்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் கூட்டணிகள் அமைந்தன என்பது மட்டுமல்லாமல், அவை அனைத்துமே சந்தர்ப்பவாதக் கூட்டணிகளாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த திமுக, 1971-இல் இந்திரா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸுடன் கைகோத்தது. அது எதிராக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜியும் காமராஜரும் இணைந்து கூட்டணி அமைத்தனர். அது சந்தர்ப்பவாதமல்லாமல் வேறென்ன? 

1977-இல் எம்ஜிஆர் தலைமையிலான அண்ணா திமுகவையும், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸையும் எதிர்ப்பதற்கு, பிற்போக்குவாதிகள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்துக் கொண்டதும்கூட சந்தர்ப்பவாதம்தான். 

1980 மக்களவைத் தேர்தலில் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் திமுகவும், காங்கிரஸும் ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை. மக்கள் செல்வாக்குப் பெற்ற அன்றைய முதல்வர் எம்ஜிஆரையே அந்தக் கூட்டணி படுதோல்வியடையச் செய்தது. 

1975-இல் அவசர நிலைச் சட்டம் கொண்டுவந்தபோது திமுக ஆட்சியைக் கலைத்தது மட்டுமல்லாமல், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திமுக தலைவர்களை மிஸாவில் சிறையில் தள்ளியது அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி. திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்கு சர்க்காரியா கமிஷன் அமைத்தது. அத்தனைக்கும் பிறகு, 1980-இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்கிற கோஷத்துடன் திமுகவும் காங்கிரஸும், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவுக்கு எதிராகக் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்றன. 
1980-இல் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்த தனது ஆட்சியைக் கலைத்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வழிகோலிய காங்கிரஸ் கட்சியுடன் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக 1984-இல் கூட்டணி அமைத்துக் கொண்டு பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதேபோல, 1987-இல் எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியைக் கலைத்தது மட்டுமல்லாமல், 1989 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 1989-இலும், 1991-இலும் அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, பெரும் வெற்றியும் பெற்றது.

1996-இல் திமுகவால் மதவாதக் கட்சி என்று விமர்சிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும், திமுகவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்றோ, 1993-இல் தன்னைக் கொலை செய்ய சதி செய்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதியால் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிளவில் உருவான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் (மதிமுக) திமுகவும் கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்றோ யாருமே கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 1999-இல் திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும், மதிமுகவும் இடம் பெற்றது. அந்தக் கூட்டணி சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று  ஜெயலலிதாவால் அப்போது வர்ணிக்கப்பட்டது.

2001 சட்டப்பேரவை தேர்தலின்போது 1996-இல் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவுடன் காங்கிரஸ் ஏற்படுத்திய கூட்டணியை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மாநில காங்கிரஸ் என்கிற கட்சியைத் தொடங்கிய ஜி.கே. மூப்பனார், 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட சந்தர்ப்பவாதம் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியது.

2004 மக்களவைத் தேர்தல் மீண்டும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை வழங்கியது. தேர்தல் அறிவிப்புக்குச் சில வாரங்கள் முன்புவரை மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக, தடாலடியாக அணி மாறி காங்கிரஸ் அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தாவியது. திமுக மட்டுமல்லாமல், அன்றைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாமகவும் மதிமுகவும்கூட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தாவின. திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் அடங்கிய அந்தக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றது. 

2009 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக அணியில் இணைந்து கொண்டன பாமகவும், மதிமுகவும். அவை மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட திமுக அணியில் இருந்து அதிமுக அணிக்கு இடம் மாறின. 2004-இல் தன்னுடன் இருந்த பாமக, மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை கூட்டணியில் இருந்து விலகியதன் விளைவால் திமுக அணி 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுக முக்கியப் பங்கு வகித்தும்கூட, 2ஜி வழக்கில் திமுக அமைச்சர் ஆ. ராசாவும், மாநிலங்களை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2014 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னால், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. பாஜக தலைமையிலான அணியில் பாமகவும் மதிமுகவும் இடம் பெற்றன. தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 இடங்களை வென்றது.
2019-இல் கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸிடமிருந்து அகன்ற திமுக, இப்போது காங்கிரஸைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க முற்பட்டிருக்கிறது. 
கடந்த தேர்தலின்போது மோடியா? லேடியா? என்று பாஜகவை விமர்சித்துப் போட்டியிட்ட அதிமுக, தனது அணியில் பாஜகவை இணைத்துக்கொண்டிருக்கிறது. 


திமுக, அதிமுக இரண்டும் வேண்டவே வேண்டாம் என்று குரல் எழுப்பிய பாமக இப்போது அதிமுக அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறது. 
திமுக தலைவர் ஸ்டாலின் மீதான எதிர்ப்பால் தொடங்கப்பட்ட வைகோ தலைமையிலான மதிமுக, அதே மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவதுதான் லட்சியம் என்று கூறி  திமுக அணியில் இடம் பெறுகிறது. 
இந்தப் பின்னணியில், ஒருவர் மீது மற்றொருவர் சந்தர்ப்பவாத முத்திரை குத்துவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.  
இத்தனையையும் கூறிவிட்டு ஓர் உண்மையையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். தமிழக வாக்காளர்கள் சந்தர்ப்பவாதத்தை பொருள்படுத்துவதில்லை என்பதும், கூட்டணி பலம்தான் தேர்தல் வெற்றியை 1967 முதல் நிர்ணயித்து வந்திருக்கிறது என்பதும்தான் அது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com