பிரேத பரிசோதனையில் போலி கையெழுத்து? மருத்துவமனை அலுவலரின் திடுக்கிடும் வாக்குமூலம்

அரசு மருத்துவர்கள் பலர் பணிக்கு வராத நிலையில், ஒரு சிலரே போலி கையெழுத்து போடுகின்றனர் என்று நீதிமன்றத்தில் மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் போலி கையெழுத்து? மருத்துவமனை அலுவலரின் திடுக்கிடும் வாக்குமூலம்


சென்னை: அரசு மருத்துவர்கள் பலர் பணிக்கு வராத நிலையில், ஒரு சிலரே போலி கையெழுத்து போடுகின்றனர் என்று நீதிமன்றத்தில் மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் விடியோ பதிவு செய்யக் கோரி அருண் சுவாமிநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதின்ற மதுரைக் கிளையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அறிவியல் பூர்வ அலுவலர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அலுவலர் லோகநாதனிடம், பிரேத பரிசோதனை தாமதமாக செய்யப்படுவதும், பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்க தாமதமாவதும் ஏன் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஒரு சில வழக்குகளில் குற்றங்களை மறைக்க தாமதமாக உடற்கூறு ஆய்வு செய்யப்படும். அதே போல தாமதமாகவே பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்கப்படும். ஆனால், ஒரு சில சம்பவங்களில் மட்டும் தாமதம் செய்தால் சந்தேகம் வரும் என்பதால் அனைத்து பிரேத பரிசோதனைகளும் தாமதப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் பணிக்கு பல மருத்துவர்கள் வருவதில்லை. ஒரே ஒரு மருத்துவர் பணியில் இருக்கும் போது அவரே அனைத்து பிரேத பரிசோதனை அறிக்கைகளிலும் கையெழுத்திடுவார். பல பிரேத பரிசோதனை அறிக்கைகள் காப்பி செய்து பேஸ்ட் செய்யப்பட்டவையாகவே இருக்கும். மருத்துவர்கள் வராத போது வேறு சிலரே கையெழுத்திடுவர் என்று கூறினார்.

மருத்துவ தடயவியல் துறை அலுவலரின் பணி என்ன, பதவிக்கான தகுதி என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் ஏழு எட்டு பெரிய அரசு மருத்துவமனைகள் இருக்கும் போது தானமாக அரசு மருத்துவமனைக்கு வரும் உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு செல்வது எப்படி? அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் உடல் உறுப்புகள் தேவையில்லை என்று கூறி தனியார் மருத்துவமனைகளுக்குக் கிடைப்பது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com