பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன: நீதிபதிகள் கருத்து

பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன: நீதிபதிகள் கருத்து

மதுரை: பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 34 பேரின் வேட்புமனுக்கள் குறைபாடானவை. அவற்றை தேர்தல் அதிகாரிகள் முறையாக பரிசீலிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதாக கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.   

எனவே, தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்புமனுவை பரிசீலிக்க உரிய பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுவில், கட்டும் டெபாசிட் தொகை, நிலுவையில் உள்ள வழக்குகள், கைது செய்யப்பட்டிருந்தால் அதன் விவரங்கள், வேட்பாளரைச் சார்ந்தவரின் வருவாய், தேர்தலுக்காக துவக்கப்படும் வங்கிக் கணக்கின் விவரம், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அப்போதைய வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அவர்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பலரும் பின்பற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். அவர்களே நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. 

எனவே, நீதிமன்ற நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நீதிமன்றத்துக்கு உரிய பதிலளிக்காத கட்சிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை 2 வாரங்களுக்குள், போரில் உயிரிழந்த வீரர்களுக்கான நிவாரண நிதியில் கட்டவேண்டும். கட்டத் தவறினால், கட்சியின் சொத்தை பறிமுதல் செய்து ஏலம் விட்டு தொகையை வசூலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நோட்டீஸ் பெற்ற பிறகும் பதில் தராத கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com