பொள்ளாச்சி கொடூரம்: கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஏப்ரல் 2 வரை நீதிமன்றக் காவல்

பொள்ளாச்சி கொடூரம்: கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஏப்ரல் 2 வரை நீதிமன்றக் காவல்

பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய எதிரியான திருநாவுக்கரசை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்திருந்தது. 

இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்த நிலையில் இன்று திருநாவுக்கரசு உட்பட 4 பேருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  

இந்த வழக்கைத் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் வழக்குத் தொடர்பான ஆவணங்களை கோவை எஸ்.பி.யிடம் இருந்து பெற்று விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு மேற்கொண்டு செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்திருந்தனர். ஆனால், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடியாது. 

முக்கிய எதிரியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டு 10 நாள்களே ஆவதால் அவரை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர்.

இதற்காக கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ்.நாகராஜனிடம் வியாழக்கிழமை மனு அளித்திருந்தனர். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதை  அடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டது. 

திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்படவுள்ள தகவல் கிடைத்ததும் தலைமை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள், திமுக மகளிரணியினர், பொதுமக்கள் திரண்டனர்.

இதற்கிடையே கோவை சிறையில் இருந்து திருநாவுக்கரசை போலீஸார் வெளியே அழைத்து வந்துள்ளனர். ஆனால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவுவதால் அவரை அழைத்து வரும்பட்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருப்பவர்கள் அவரைத் தாக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காணொலிக் காட்சி அறையில் இருந்து வழக்கை நீதிபதி எஸ்.நாகராஜன் விசாரித்தார். 

சிறையில் காணொலிக் காட்சி மூலம் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4  நாள் (மார்ச் 19 வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருநாவுக்கரசை காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தக்கூடாது. நீதிமன்ற அறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டதால், அதுகுறித்து நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்படும்பட்சத்தில் அவர் தாக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல் துறை நுண்ணறிவுப் பிரிவினர் தகவல் தெரிவித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருந்த காரணத்தால் விசாரணையை காணொலிக் காட்சி மூலம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், இதற்கு சட்டத்தில் அனுமதி இருப்பதாகவும், இதுபோல பல வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்ட வரலாறு இருப்பதாகவும் வழக்குரைஞர்களிடம் நீதிபதி எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, சிறையில் இருந்த திருநாவுக்கரசு மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை முடிந்த பின்னர் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொள்ளாச்சியில் விசாரணையைத் தொடர உள்ளனர்.

ரிஷ்வந்த் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது  செய்யப்பட்ட  சபரி(எ) ரிஷ்வந்த் வீட்டில் சிபிசிஐடி  போலீஸார் கடந்த வாரம் விசாரணை மேற்கொண்டனர். சபரி(எ) ரிஷ்வந்த் வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் சென்றனர். தொடர்ந்து நான்கு மணி நேரம் சபரி (எ) ரிஷ்வந்தின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். 

சோதனையில் சில ஆவணங்கள், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சென்றதாகத் தெரிகிறது. 

உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஏ.ராஜராஜன், ஒய்.வில்லியம் வினோத் குமார் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் டி.ஹரிஷ் குமார், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் பாதுகாக்கவும், அவர்களது அடையாளங்களை வெளியிடாமல் இருக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான, நேர்மையான, பாரபட்சமில்லாத விசாரணையை நடத்தவும், விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டதற்கு கோவை காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) ஆர். பாண்டியராஜனுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com