பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது?: கே.எஸ்.  அழகிரி கடுகடு 

பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது?: கே.எஸ்.  அழகிரி கடுகடு 

சென்னை: பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சில வருடங்களாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியையும், தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியையும் எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தி.மு.க. தலைமையில் இணைந்து நடத்திய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக மதச்சார்பற்ற கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. ஆனால் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டிருப்பதோ திரைமறைவு பேரங்களின் அடிப்படையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

இதில் இணைந்துள்ள கூட்டணி கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சமீபகாலம் வரை கடுமையாக கூறி வந்தவர்கள். அரசியல் சுயநலத்தின் காரணமாக கூட்டணி அமைத்தவர்கள் கொள்கையின் காரணமாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. கூட்டணியினுடைய பிரதமர் மோடி என்பதை அறிவித்து விட்டு, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு யார் பிரதமர் என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். பா.ஜ.க.வோடு கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு எத்தகைய உத்திகள் கையாளப்பட்டன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இந்த உத்தியை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் பகிரங்கமாக பயன்படுத்தப்பட்டன.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நரேந்திர மோடி கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் எழுந்துள்ள நரேந்திர மோடி எதிர்ப்பு அலையில் அ.தி.மு.க. இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள். இத்தகைய பின்னணியில் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்த எடப்பாடி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

மடியில் கனம் இருப்பதால் பா.ஜ.க.வை எதிர்க்கிற துணிவை எடப்பாடி இழந்திருக்கிறார்.

மத்திய வருமான வரித்துறை தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அறை உள்ள தலைமைச் செயலகத்திலேயே முதலமைச்சர் அறையின் அருகிலேயே பல மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டிலும், மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை எதிர்த்து கருத்து கூற துணிவில்லாத எடப்பாடி பழனிச்சாமி எங்கள் கூட்டணியை விமர்சிக்க என்ன நியாயம் இருக்கிறது ?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியல் களத்தை மோடியா, லேடியா என்று முன்வைத்தவர் ஜெயலலிதா. அதன்மூலம் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவையில் பெற்ற அ.தி.மு.க. தமிழக உரிமைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன ? மக்களவையில் உரிமைக் குரல் எழுப்ப ஏன் அஞ்சுகிறது ?

மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் தமிழகம் வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிற எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தமிழகத்திற்காக பெற்றுத் தந்தது என்ன ?

தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்து விட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளவே பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. தன்னை அடகு வைத்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமை அடகு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலநிலையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது.

இந்தியாவின் எதிர்கால பிரதமராக திரு. ராகுல்காந்தி அவர்களின் பெயரை முதன் முதலில் முன்மொழிந்தவர் தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தமிழக நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எதிர்கால பிரதமராக திரு. ராகுல்காந்தி அவர்கள் வர வேண்டும் என்பதே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும். இதுவரை நடைபெற்ற 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பான பிரதமரை தேர்வு செய்வதற்கே தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பிரதமரை தேர்வு செய்ய ஆதரித்த தமிழக மக்கள், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள திரு. ராகுல்காந்தி அவர்களை பிரதமராக தேர்வு செய்வதற்கு நிச்சயம் வாக்களிக்கப் போகிறார்கள்.

2004  இல் அளித்த தீர்ப்பை 2019 இல் மீண்டும் வழங்கப் போகிறார்கள். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது ? எனவே, தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனையும், உரிமைகளையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்ட வேண்டுமென தமிழக மக்களை அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com