பிரதமரை நிர்ணயிக்க முடியாத திமுக கூட்டணி:  எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக கூட்டணியில் மோடிதான் அடுத்த பிரதமர் என்று கூறுகிறோம்.  ஆனால்,  யார் பிரதமர் என நிர்ணயிக்க முடியாத கூட்டணியாக திமுக கூட்டணி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம், நெய்காரப்பட்டியில் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை அறிமுகப்படுத்திப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம், நெய்காரப்பட்டியில் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை அறிமுகப்படுத்திப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


அதிமுக கூட்டணியில் மோடிதான் அடுத்த பிரதமர் என்று கூறுகிறோம்.  ஆனால்,  யார் பிரதமர் என நிர்ணயிக்க முடியாத கூட்டணியாக திமுக கூட்டணி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் நெய்காரப்பட்டியில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 20) நடைபெற்றது.  இதில் அதிமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
நாட்டில் நிலையான, வலுவான ஆட்சி அமைக்கும் வகையில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நிலையான ஆட்சி தர நல்ல தலைவர் வேண்டும்.  எதிரி நாடுகள் நம்மை தாக்கி வருகின்றன. நாட்டின் வலிமையான தலைவர் பிரதமர் மோடியாகத்தான் இருக்க முடியும்.  நாட்டுக்கு பாதுகாப்பு தரும் ஒரே கட்சி பாஜக தான்.  யார் வேண்டுமானாலும் கூட்டணியில் சேரலாம்.  ஆனால், பிரதமராவது மோடி தான்.
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவுடன் இருந்தபோது,  மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தார்.  மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாததால்தான் தலைவர் பதவியைத் தராமல் இருந்தார்.  அவரது தந்தையே மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைக்கவில்லை.  நாட்டு மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில்,  ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.  ஆனால், அந்த விழாவில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  ராகுலை பிரதமராக ஏற்க முடியாது என்றார்.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில்  கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுப்போம் எனக் கூறினார்.
திமுக நிமிடத்துக்கு நிமிஷம், நொடிக்கு நொடி மாறுகிறது. இந்தக் கூட்டணியில் மோடிதான் அடுத்த பிரதமர் என்று கூறுகிறோம்.  ஆனால்,  யார் பிரதமர் என நிர்ணயிக்க முடியாத கூட்டணியாக அவர்கள் இருக்கின்றனர்.
மக்கள் நலனில் முக்கியத்துவம் கொடுத்து கூட்டணி அமைத்திருக்கிறோம்.  மக்கள் செல்வாக்குள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்த பலம் பொருந்திய கூட்டணியாக உள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகள் அமையும்போதுதான் நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும்.  தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும்.
பாஜகவோடு கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைத் தொடர்ந்து,  திமுக பதவி சுகத்துக்காக பாஜகவோடு கூட்டணி அமைத்தது.  இப்போது நாங்கள் கூட்டணி அமைத்திருக்கும்போது, மதவாதக் கட்சி என விமர்சிக்கிறது.
திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி: மத்தியில் 12 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டு வரவில்லை.  காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைக்கவில்லை.  திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி சுயநலக் கூட்டணியாகும்.
சில சுயநலவாதிகள் அதிமுகவை உடைக்க வேண்டும்,  கவிழ்க்க வேண்டும் என்று சதி செய்த காரணத்தால்,  18 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி, இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம். 
லட்சியம்: தமிழகம் பாசனத்துக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டி உள்ளது.  தமிழகத்தின் 50 ஆண்டு கால நதிநீர்ப் பங்கீடு பிரச்னைக்கு உச்ச நீதிமன்றத்தின் நல்ல, நிரந்தரத் தீர்வை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்தார்.  இத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் லட்சியமாகும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.  நீண்ட கால கோரிக்கையான காவிரி-கோதாவரியை இணைக்க கடுமையாகப் பாடுபடுவோம்.  
     பாமக அளித்த பல்வேறு கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்.  சேலம் மாவட்டத்தில் ராணுவத் தளவாட உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப் பாடுபடுவோம்.  இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.  இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற மத்தியிலும்,  மாநிலத்திலும் இணக்கமான அரசு அமைய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,  துணைத் தலைவர் கார்த்தி,  மாநில துணை பொதுச் செயலர் இரா.அருள்,  தேமுதிக நிர்வாகி இளங்கோவன், பாஜக மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com