மாநில சுயாட்சிக்காக திமுக எதுவும் செய்யவில்லை: பாமக நிறுவனர் ச.ராமதாஸ்

மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
மாநில சுயாட்சிக்காக திமுக எதுவும் செய்யவில்லை: பாமக நிறுவனர் ச.ராமதாஸ்


மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் ஆகியோரை அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மகா கூட்டணியை அமைத்திருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, கூட்டணி அமைத்து வாஜ்பாயை பிரதமராக்கிய கூட்டணி இது. தற்போது, அதைவிட பலமான கூட்டணி அமைந்துள்ளது.
சத்துணவுத் திட்டம், தாலிக்குத் தங்கம் என பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, அதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9-ஆவது பிரிவில் இணைத்து, பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா.
இடஒதுக்கீட்டுக்காக பாமக நடத்திய போராட்டம், 108 அவசர ஊர்தித் திட்டம், ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது ரயில்வேயில் மீட்டர் கேஜ் பாதைகளை அகற்றி, அகல ரயில் பாதையாக்க வித்திட்டது; புகை, மது ஒழிப்புக்கு அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கைகள் பாமகவுக்கு பெருமை சேர்த்தன.
கார்கில் போர் வெற்றி, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது போன்ற அதிரடி நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க முயற்சித்தது என பல திட்டங்கள் பாஜகவின் சாதனைகளாக உள்ளன.
திமுக அணி ஆட்டம் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று தமிழகத்தில் 37 தொகுதிகளை வென்றது. பாமக, பாஜக தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன. பெரிய கட்சி எனக் கூறிக் கொள்ளும் திமுக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
1957-இல் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற திமுகவின் முழக்கம் என்னாச்சு?.  18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழ் மொழிக்கும், மாநில சுயாட்சிக்கும் திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை.
கூட்டணியால் மாநில உரிமையை நாங்கள் பெற்றுத் தருவோம். ஈழத் தமிழர் பிரச்னையை தீர்க்கவும், 7 பேர் விடுதலைக்கும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம். தேர்தலுக்குப் பிறகு அவர்கள் விடுதலை ஆவார்கள் என நம்பலாம். 10 அம்சக் கோரிக்கைகளையும் வைத்துள்ளோம்.
தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது. மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
பிற கட்சிகளைக் காட்டிலும், அதிமுகவின் தேர்தல் வியூகம் சிறப்பாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அமைச்சர் சண்முகம் உறுதியளித்துள்ளார். 40 தொகுதிகளின் வெற்றிக்கும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com