தமிழ்நாட்டில் அமைந்துள்ளது ஒரு கிரிமினல் கேபினட்: சேலத்தில் ஸ்டாலின் சுளீர் 

தமிழ்நாட்டில் அமைந்துள்ளது ஒரு கிரிமினல் கேபினட் என்று சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ளது ஒரு கிரிமினல் கேபினட்: சேலத்தில் ஸ்டாலின் சுளீர் 

சேலம்: தமிழ்நாட்டில் அமைந்துள்ளது ஒரு கிரிமினல் கேபினட் என்று சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை தரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெள்ளியன்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதில் இருந்து:

புதனனன்று என்னுடைய தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் துவங்கி, தலைவர் கலைஞர் அவர்கள் வளர்ந்த தஞ்சைக்குச் சென்று, நேற்றைய தினம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் சென்று இன்று சேலத்திற்கு நான் வந்திருக்கின்றேன். ‘நாடும் நமதே - நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த பயணத்தை நான் இன்று மூன்றாவது நாளாக நடத்திக்கொண்டு இருக்கின்றேன்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மீதும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சி மீதும் மக்கள் கொண்டிருக்கக்கூடிய வெறுப்பையும் இன்றைக்கு இந்தக் கூட்டம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்தக் கோட்டை மைதானம், நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.

இந்த சேலத்தை கோட்டை ஆக்கித் தந்தவர் தான் நம்முடைய அன்பிற்குரிய மறைந்த வீரபாண்டியார் அவர்கள் என்பதையும், நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். சேலத்தை கோட்டை ஆக்கிவிட்டு நம்மிடத்தில் ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்.

உதய சூரியன் உதித்ததற்குப் பிறகுதான் இந்த தமிழ்ச் சமுதாயம் வெளிச்சத்தைப் பார்த்திருக்கின்றது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்கள் கல்வியை கற்க முடிந்தது, வேலை வாய்ப்பைப் பெற முடிந்தது, தன்னம்பிக்கையை பெற முடிந்தது, நாம் மனிதர்கள் என்ற அந்த உணர்வை பெறுவதற்கு உதயசூரியன் சின்னம் தான் காரணமாக அமைந்திருக்கின்றது. உதயசூரியன் சின்னத்தில் அடிப்படையில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் உருவாகியிருக்கின்றது. நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்களாக மருத்துவர்களாக வழக்கறிஞர்களாக இன்றைக்கு உருவாக்கி இருக்கின்றார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய உதயசூரியன் சின்னம் தான். உயர்கல்வி பெற்றவர்கள் உன்னதமான இடத்திற்கு இன்றைக்கு வந்திருக்கின்றார்கள் என்று சொன்னால், நம்முடைய உதயசூரியன் சின்னம் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.

சுயமரியாதை இயக்கத்தையும் நீதிக்கட்சியையும் இணைத்து திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் 1944 ஆம் ஆண்டு நடந்திருக்கின்றது. 44ஆம் ஆண்டு பெயர் மாற்றம் நடந்த ஊர் இந்த சேலம் தான் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

தி.மு.கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இருக்கின்றதோ அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியில் இருந்த நேரத்திலும் சரி, அதற்குப் பிறகு அவர் வழிநின்று பணியாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை தலைமையேற்று வழி நடத்திய நேரத்திலும் சரி, சாமானிய மக்களுக்காக எத்தனையோ திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டிருக்கின்றது.

அவர்கள் சொல்லக்கூடிய சாதனைகள் எல்லாம் வேதனைகளாகத் தான் இருக்கும். என்னென்ன வேதனைகள் என்று கேட்டால்? கொடநாட்டில் கொள்ளை, கொடநாட்டில் கொலை, குட்கா விவகாரம். அதில் அமைச்சர்களுக்கும் சம்பந்தம் உண்டு. டி.ஜி.பி-யும் அதில் தலையீடு. இப்படி பல விவகாரங்கள் அதேபோல் மொத்த கான்ட்ராக்ட்களையும் தன் பினாமிக்கு கொடுத்து கள்ளா கட்டுவது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது, பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டிருப்பதை மூடி மறைப்பது, தர்மாகோல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்தது. கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது, இதுபோன்ற சாதனைகளைத் தான் அவர்களால் சொல்ல முடியும்.

அதேபோல், ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, ஐ.ஏ.எஸ் அதிகாரி முகத்தில் திராவகத்தை வீசியது, கவர்னர் மீது பாலியல் அவதூறு, முதல்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு. என்ன அந்தக் கொலைக் குற்றச்சாட்டு. 5 கொலை எடப்பாடி என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிரபலம்.

அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்னை குறித்து கொடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவோம் என்ற உறுதிமொழி தரப்பட்டது. எனவே, அந்த உறுதிமொழி விரைவில் நிறைவேற்றப்படும். ஊழல் செய்து விட்டு கைதானவர் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.  இப்போது ஊழல் மட்டுமல்ல கொலை செய்து சிறைக்குச் செல்லக்கூடிய முதலமைச்சர் என வரலாறு படைக்கக் கூடியவர்தான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

இதில் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுமானால் அவமானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டிற்கு அவமானம் தமிழக அரசியலுக்கு அவமானம். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய அவமானமாக வந்து சேர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல அவருக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஓ.பி.எஸ் அதைத் தொடர்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்கள். ஒரு கிரிமினல் கேபினட் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. எப்படி இதை கிரிமினல் கேபினட் என்று சொல்லுகிறோம் என்று சொன்னால், ஓ.பி.எஸ் நிதித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது. அதேபோல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் மீது ஸ்மார்ட் சிட்டி ஊழல் அந்த வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கின்றது. அதேபோல் மின்துறை அமைச்சர் தங்கமணி, அவர் மீது நிலக்கரி ஊழல். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் மீது குட்கா ஊழல்.

முட்டையில் ஊழல், மின் விளக்கு வாங்குவதில் ஊழல், எனவே கமிஷன் இல்லாத இடமே இல்லை. கமிஷன் வாங்காத அமைச்சரே இல்லை. கரப்சன் இல்லாத துறையே இல்லை. கமிசன் - கலெக்சன் - கரெப்சன் - என்ற அந்த நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி எல்லாம் நியாயமாக யாரிடத்தில் புகார் தர வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இடத்தில் தான் புகார் தர வேண்டும். ஆனால், புகார் தர முடியாது. காரணம் அவர் மீது புகார் இருக்கின்றது இப்பொழுது. அதற்குமேல் யார் டி.ஜி.பி ராஜேந்திரன். தலைமை காவல் துறையின் அதிகாரி அவர் மீது இன்றைக்கு குட்கா ஊழல் இருக்கின்றது. எனவே அவர் இடத்திலும் புகார் தர முடியாது. சரி அதற்கும் மேல் யார்? தமிழகத்தின் ஆளுநர், அவர் இடத்தும் புகார் தர முடியாது காரணம் நிர்மலா தேவி விவகாரம் அவர்மேல் இருக்கின்றது. சரி அதற்கும் மேல் யாரிடத்தில் பிரதமர் மோடி இடத்தில் அங்கேயும் போக முடியாது காரணம் அவர் மீது ஊழல் விவகாரம் சந்தி சிரித்து கொண்டுள்ளது. எனவே தான், அவர்களிடத்தில் புகார் தர முடியாது உங்களிடத்தில் புகார் தர வந்திருக்கின்றோம். அந்தப் புகார்களை எல்லாம் நீங்கள் பரிசீலித்து அதற்கு உரிய தண்டனையை நீங்கள் வழங்கிட வேண்டும்.

மோடியும் எடப்பாடியும் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு பேர் சேர்ந்துதான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது புதிதாக மூன்றாவது ஒருவர் சேர்ந்திருக்கின்றார். யாரென்று தெரியும் உங்களுக்கு பெருமதிப்பிற்குரிய அய்யா அவர்கள். பெரிய அய்யா சேர்ந்திருக்கின்றார்கள். ஐந்து வருடமாக நாம் கூட ஆளும் கட்சி அ.தி.மு.க-வை பார்த்து இப்படி திட்டினது கிடையாது. அவ்வளவு திட்டு கேவலமான முறையில் திட்டு அப்படி எல்லாம் திட்டி திட்டி தீர்த்து விட்டு இப்பொழுது கூட்டணி சேர்ந்து இருக்கின்றார்கள். ஏனென்றால் கேட்டதெல்லாம் இப்பொழுது கிடைத்திருக்கின்றது அவருக்கு. சீட்டு மட்டுமா கிடைத்திருக்கின்றது, எல்லாம் கிடைத்திருக்கின்றது. ஒருவேளை கேட்டதை விட அதிகமாக கிடைத்திருக்கலாம் எனவே, அதற்காக கூட்டணி.எடப்பாடிக்கு மணி அடிக்கும் பூசாரிகளாக இரண்டு பூசாரிகள். அதுதான், பெரிய ஐயா – சின்ன ஐயா.

விவசாயிகள் பிரச்னைக்காக போராடுகின்றோம், நெசவாளர்களுக்கு துன்பம் ஏற்படுகின்றதா ஓடோடி வருகின்றோம். அரசு ஊழியர்கள் பிரச்னையா செவிசாய்க்க வேண்டுமென வீதிக்கு வந்து போராடுகின்றோம், சாலை மறியல் நடத்துகின்றோம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம். விவசாயிகளுக்காக நடைபயணத்தை நடத்தினோம். எனவே கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக நாங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய அந்த அமைப்பு தான் இன்றைக்கு கூட்டணியாக தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடக்கூடிய நிலையில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். இது ஒரு கொள்கை கூட்டணி, ஆனால் எதிரணியில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணியை பொறுத்தவரைக்கும் அது கொள்கைக் கூட்டணி அல்ல பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணி.

கொளுத்துகின்ற வெயிலில் நீங்கள் உட்கார்ந்திருக்கின்றீர்கள். ஏற்கனவே இந்த ஆட்சியின் கொடுமையை உங்களால் தாங்க முடியவில்லை. அந்தக் கொடுமையை சந்திக்கின்ற பொழுது இந்தக் கொடுமை உங்களுக்கு பெரிதாக இல்லை என்று சொன்னாலும் நான் உங்களை துன்பப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com