
இறந்தவர் பெயரில் மின் இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை நேரு நகர் பிரிவு பகுதியில் ஒரே வளாகத்தில் இயங்கும் இரு கடைகளுக்கு இறந்த நபர் ஒருவரின் பெயரில் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் என்.லோகு மின்வாரிய இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கோவை நேருநகர் பிரிவில் தனியார் வணிக வளாகம் உள்ளது.
இங்கு கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் தேநீர் கடை செயல்பட்டு வருகின்றன. இந்த இரு கடைகளுக்கும் இறந்துபோன எஸ்.அம்மாசைக்குட்டி என்பவரது பெயரில் 2018 ஜூன் 2 ஆம் தேதி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கான விண்ணப்பதாரரின் விவரங்களை கள ஆய்வு செய்யாமல் இணைப்பு வழங்கியுள்ளனர்.
மேலும், கட்டுமானப் பொருள்கள் விற்கும் நிறுவனத்துக்கு, சிறு நிறுவனத்துக்கு வழங்கப்படும் வகையில் வீதப் பட்டியல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மின்வாரிய விதிகளுக்குப் புறம்பானது. எனவே இறந்தவர் பெயரில் மின் இணைப்பு வழங்கியது குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...