காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3.20 கோடி பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3.20 கோடியை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3.20 கோடியை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 33 பறக்கும்படை குழுவினர் மற்றும் 33 கண்காணிப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பறக்கும்படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.3.20 கோடி ரொக்கம்,  ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை, பல லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் மற்றும் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் பா. பொன்னையா கூறியது: தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்துக்கு சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரத்தை அடுத்த செய்யூரில் ரூ.3.02 கோடி, மதுராந்தகத்தில் ரூ.2. 21லட்சம், காஞ்சிபுரத்தில் ரூ. 2.14 லட்சம் உத்தரமேரூரில் ரூ.1.89 லட்சம், செங்கல்பட்டில் ரூ.1.26 லட்சம், ஆலந்தூரில் ரூ.69, 500, ஸ்ரீபெரும்புதூரில் ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 79 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலைப் பகுதியில் 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம், மதுராந்தகத்தில் ரூ.1.46 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்துக்கான சான்றுகளை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
குறிப்பாக, பெட்ரோல் நிலையங்கள், வங்கிகள், அரிசி ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கூறினார்.  அத்துடன், பொன்னேரிக்கரை பகுதியில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐம்பொன்சிலை, ரூ.1.24 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும், உத்தரமேரூரை அடுத்த கரூர் பகுதியில் ரூ.7.65 லட்சம் ரொக்கத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கமும், பல லட்சம் மதிப்புள்ள இதர பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என தேர்தல் பறக்கும் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com