
வாழப்பாடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு தலா 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி ஒருவருக்கு, மூன்று குழந்தைகள்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 14- ஆம் தேதி இரவு தொழிலாளியின் 10 வயது மகள், தனது சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கி சென்றனராம். கூட்டு வன்புணர்வு செய்தபோது, இறந்த சிறுமியை ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பை வியாழக்கிழமைக்கு (மார்ச் 21) அளிக்கப்படும் என்றும் நீதிபதி விஜயகுமாரி மார்ச் 19-இல் தெரிவித்தார்.
இதில் 5 பேருக்கும் கூட்டு சதி (120 பி), அத்துமீறி வீட்டில் புகுந்து குற்றம் புரிதல் (450), பலவந்தமாக கடத்தி செல்லுதல் (366) ஆகிய பிரிவுகளில் தலா
10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடத்திச் செல்லுதல் (363), சாட்சியங்களை அளித்தல் (201) ஆகிய இரு பிரிவுகளுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரிவு 404-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை என 5 பேருக்கு தலா 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதுதவிர, கொலை மற்றும் போக்சோ 5/6 சட்டப் பிரிவு என இரு பிரிவுகளில் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 120 -பி பிரிவு தவிர ஒவ்வொரு பிரிவுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...