மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைப்போம் என்றார்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
வாழப்பாடியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
வாழப்பாடியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைப்போம் என்றார்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில், வெற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டு,  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை காலை தொடங்கினார்.  இதையடுத்து,  வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில்   பிரசாரம் செய்து மேலும் அவர்  பேசியது:
தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மெகா கூட்டணி,  கொள்கை கூட்டணி. இந்தக் கூட்டணியைப் பார்த்துப் பயந்து நடுங்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதவாதக் கூட்டணி என விமர்சிக்கிறார்.  பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து, அமைச்சரவையில் இடம்பெற்ற போது, மதவாதக் கட்சியுடன் கூட்டணி என்பது அவருக்கு தெரியவில்லை.  நாங்கள் கூட்டணி அமைத்த பிறகு தான் மதவாதக் கூட்டணி எனத் தெரிகிறது.  திமுக கூட்டணியினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.  15 ஆண்டுகள்  திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்,  தமிழ்நாட்டுக்கு புதிய தொழிற்சாலைகள்,  திட்டங்கள், நிதியைக் கொண்டு வரவில்லை.  திமுக வினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.  தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. 
காவிரி,  முல்லை பெரியாறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவில்லை.  தி.மு.க.வினர் கிடைத்த வாய்ப்பை குடும்ப நலனுக்கே  பயன்படுத்திக் கொண்டனர். 
ஆனால்,  மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்தோடு, மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கும் பாஜக,  பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.  இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு.  நாட்டுக்கு நல்ல தலைவர் தேவை.   எதிர்க்கட்சி கூட்டணியினர் இங்கே ஒன்றையும்,  வெளி மாநிலத்தில் வேறொன்றையும் பேசுகின்றனர்.  திமுக கொள்கையில்லாத கட்சி. பதவி சுகத்திற்காக உள்ள கட்சி. அதிமுக கொள்கையுடைய கட்சி. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து  நாட்டைக்காக்க வேண்டும். இதற்கு  உறுதியான, நிலையான, வலுவான தலைமை வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் என்றே தெரியவில்லை.  இவர்களால் எப்படி நல்ல  ஆட்சியை அளிக்க  முடியும். 
கெங்கவல்லி, ஆத்தூர் பகுதியில் அனைத்துக் கிராமங்களுக்கும் காவிரி தண்ணீர் வசதி அளித்தது  அதிமுக அரசுதான்.  அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.  வாழப்பாடி வட்டார அலுவலகத்துக்கு புதிய கட்டடம், வாழப்பாடியில் புதிய நீதிமன்றம், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  முத்தம்பட்டி ரயில்வே கேட்டுக்கு மேம்பாலமும்,  குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக வாழப்பாடியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள் வேலை வழங்குவதை 200 நாளாக நீட்டிக்கப்படும்.  தமிழகம் முழுவதும் 2 கோடி பேருக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தோம்.  இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் திமுக வினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. 
தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை முடக்க தேர்தல் ஆணையத்திடம்  திமுக வினர் புகார் அளித்துள்ளனர்.  இவர்களா மக்களுக்கு நன்மை செய்வார்கள். பொங்கல் பரிசு பெற்ற 2 கோடி பேருமே அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கூட்டணி கட்சியினர் இல்லை.  ஏழைகளுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்தும் திமுகவால்  மக்களுக்கு நன்மை கிடைக்காது. மற்ற மாநிலங்களைவிட நல்ல சாலை வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் சாலைகளைத் தரம் உயர்த்த ரூ.70 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 41 சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படுவதால்,  விபத்தில்லாத பயணம் அமையும். 
அதிமுக கூட்டணியின் ஒரே நோக்கம்,  மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு நன்மை தரும் நிலையான ஆட்சி அமைப்பதுதான்.  எனவே, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக  கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தாருங்கள். மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு நன்மை தரும் நிலையான ஆட்சி அமைப்போம் என்றார். 
ஆத்தூரில் பிரசாரம்... : அதேபோல கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியிலும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
மத வழிபாட்டுக்கு மரியாதை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மசூதியில் முஸ்லிம்களை வழிபாட்டுக்கு அழைக்கும் நோக்கில்  ஒலிபெருக்கியில் ஓதப்பட்டது. இதனால், தனது பேச்சை உடனடியாக நிறுத்திய முதல்வர், ஒலிபெருக்கியில்  ஓதி முடித்த பிறகே தனது பேச்சைத் தொடர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com