மின்மிகை மாநிலம் ஆனதால் ரூ. 3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்த நிலையில், ஜெயலலிதா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதுடன், அவரது வழியில் தொடரும் இந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகியுள்ளது.
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்த நிலையில், ஜெயலலிதா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதுடன், அவரது வழியில் தொடரும் இந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகியுள்ளது. இதனால், கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை இரவு பேசியது:
மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சியை மீண்டும் அமைக்க தமிழகத்தில் அதிமுக தலைமையில் வலிமைமிக்க கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் தேர்தல். தர்மத்தை வெற்றி பெறச் செய்து, அதர்மத்தை வீழ்த்த வேண்டும். 
மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழக மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. தனது குடும்பத்தினர் நலனுக்காகவே அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரமும் தமிழக நலனுக்காக எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 
அதிமுக ஆட்சியில்தான் தமிழகம், உயர்கல்வியில் 21 சதவீதத்தில் இருந்து 46.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்தவகையில், கல்விக்காக அதிக நிதிஒதுக்கீடு செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மாணவர்கள் விஞ்ஞானப்பூர்வ கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதுவரை 37 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 15 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. 
குடிமராமத்துப் பணி மூலம் இதுவரை 2,500 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏரிகளும் விரைவில் தூர்வாரப்படும். இந்தத் திட்டத்தால் விவசாயிகளும் பயன்பெற்று, ஏரிகளும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. பருவமழைக் காலங்களில் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைக்க ரூ. ஆயிரம் கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை ஏற்படும். உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகியுள்ளது. இரு கைகளை இழந்த தொழிலாளி ஒருவருக்கு வேறு ஒருவரின் கைகளைப் பொருத்திய வரலாறு இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. உணவு உற்பத்தியிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 
கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டு கடுமையாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது வழியில் தொடரும் இந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகியுள்ளது. இதன்காரணமாக, கடந்த ஜனவரியில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 304 திட்டங்களுக்கு கையெழுத்தாகியுள்ளது. 
இதன்மூலம், நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் என 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் ஊரக வேலையுறுதித் திட்டப் பணி நாள்கள் 100-இல் இருந்து 200 நாள்களாக உயர்த்தப்படும். எனவே, மத்தியிலுள்ள வலிமையான, திறமையான ஆட்சி தொடர மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர். 
முன்னதாக, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com