மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார்: ஆதாரங்களை ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரி உத்தரவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக அளித்துள்ள புகார் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார்: ஆதாரங்களை ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரி உத்தரவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக அளித்துள்ள புகார் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறான கருத்துகளைக் கூறுவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களுடன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வெள்ளிக்கிழமை இரவு புகார் மனு அளித்தார். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த சத்யபிரத சாகு கூறியது:-
தேர்தல் தொடர்பாக எந்தப் புகார்கள் வந்தாலும் அவை சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். முசிறியில் நடந்த கூட்டம் தொடர்பாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது. இந்தப் புகார் மனு குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி (திருச்சி) அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாக அளிக்கப்பட்ட விடியோ ஆதாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்து திமுகவும் புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் மனு தொடர்பாகவும் விசாரிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.  அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
இதுவரை வேட்பு மனுக்கள்: மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 253 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 217 ஆண்களும், 35 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட 72 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், 54 ஆண்களும், 18 பெண்களும் உள்ளனர்.
மூன்று பேரவைத் தொகுதிகள்: சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி காலியானதாக பேரவைச் செயலகத்தில் இருந்து வந்த அறிவிப்பை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். இதேபோன்று, ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி குறித்த நீதிமன்ற உத்தரவைப் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். 
அதேசமயம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பெறப்படவில்லை. இந்த உத்தரவு கிடைத்ததும் அதையும் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம். மூன்று தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையமே வெளியிடும். இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பை எப்போது வெளியிட்டாலும் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளோம்.
இதுவரை எவ்வளவு பறிமுதல்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில், இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.29.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 22) ஒரே நாளில் ரூ.10.72 கோடி பறிமுதல் ஆகியுள்ளது. பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள ரொக்கப் பணத்தில் ரூ.4.45 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநிலம் முழுவதும் 209.53 கிலோ தங்கம் பறிமுதல் ஆகியுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பித் தரப்பட்டுள்ளது என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com