இலங்கைத் தமிழர் விவகாரம்: திமுக - காங்கிரஸாருக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தப்படும்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு உரிய தண்டனை வழங்க அதிமுக வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் இணைப்புத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு உரிய தண்டனை வழங்க அதிமுக வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் இணைப்புத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தேர்தல் அறிக்கை கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில முக்கிய விஷயங்களுடன் இணைப்புத் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

இலங்கையில் கடந்த 2009-இல் அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச ஆட்சியில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 

இதற்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசின் உதவியே காரணமாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவை ஆண்ட அரசின் ஆதரவில்லாமல் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றார். இதிலிருந்தே ஈழத் தமிழ் இன அழிப்பில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசின் சதித் திட்ட பின்னணியை தெளிவாக உணர முடிகிறது.

இந்தக் கொடிய போரின் வெற்றிக்கு உதவிய கனிமொழி குழுவினருக்கு நன்றிக் கடனாக பாராட்டுதல்களையும், பரிசுப் பொருள்களையும் ராஜபட்ச வழங்கினார். எனவே, அவர்களையும், இனப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டோர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்து தக்க தண்டனை அளிக்க அதிமுக பெரிதும் வலியுறுத்தும்.

ஏழு தமிழர்கள் விடுதலை: இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறும் ஏழு தமிழர்களையும் விடுவிக்க, தமிழக ஆளுநருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசையும், இந்திய குடியரசுத் தலைவரையும் அதிமுக வலியுறுத்தும்.

காவிரி-கோதாவரி இணைப்பு: காவிரி-கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் இன்றியமையாதது. இந்த நதிகள் இணைப்பு நடைபெறுவதன் மூலம் ஆண்டுதோறும் கடலில் கலந்து வீணாகும் 1100 டி.எம்.சி., தண்ணீர் குறிப்பிடத்தக்க அளவு தமிழகத்துக்குப் பயன்படும். எனவே, இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.

மாநில உரிமைகள் மீட்டெடுப்பு: இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு மாறாக, ஆட்சிப் பொறுப்பில் உள்ள மத்திய அரசுகள் செயல்படுகின்றன. இதனால், மாநிலங்கள் அவற்றின் உரிமைகளை படிப்படியாக இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை மீட்டெடுக்க அதிமுக உணர்வுப்பூர்வமான செயலாக்கத்தில் ஈடுபடும். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காக சில கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் அதிமுக உறுதி பூண்டுள்ளது.

மதச்சார்பின்மை: சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்குவதுடன், அனைத்துத் துறைகளிலும் மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதே அதிமுகவின் நோக்கமாகும்.

அனைவருக்கும் சம உரிமை, சமூகநீதி நிலைநாட்டப்படும். பொது மக்களின் கருத்துகளுக்கு உரிய மரியாதை அளித்து அவர்கள் மதித்து நடத்தப்படுவர். அனைத்துப் பிரச்னைகளும் முழு வெளிப்படைத் தன்மையுடன் அணுகப்படும். 
அரசின் அனைத்து கடமைகள், பொறுப்புகளை உணர்ந்து பாரபட்சமின்றி நல்ல நிர்வாகம் அளிக்கப்படும்.

அரசின் அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்படும். சட்டத்தின் முன்பும், ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவர். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-எதிலும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும் எனும் நல்லாட்சி அளிக்கப்படும்.

ஒத்த கருத்துள்ள  கட்சிகளுடன் கூட்டணி

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இணைப்பு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தனி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உன்னதமாக மேம்படுத்தவும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வேளாண், தொழில் துறையின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தவும், சகோதரத்துவம்-மதச்சார்பின்மை, சமூக நீதியை உறுதியுடன் பாதுகாக்கவும் நேர்மையான தொலைநோக்குடைய ஆட்சி நிர்வாகத்தை நிறுவிட அதிமுக உறுதி பூண்டுள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிட ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் சீரிய கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com