புதுச்சேரி கடற்கரையில் வாக்காளர்களை கவரும் "செல்ஃபி கார்னர்'

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கி வைக்கப்பட்ட "செல்ஃபி கார்னர்' வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி கடற்கரையில் வாக்காளர்களை கவரும் "செல்ஃபி கார்னர்'

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கி வைக்கப்பட்ட "செல்ஃபி கார்னர்' வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. 
இதன் ஓர் அங்கமாக, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையம் அருகே இளம் வாக்காளர்களை கவரும் வகையில் சுயபடம் எடுக்கும் இடம் (செல்ஃபி கார்னர்) ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த செல்ஃபி கார்னரில் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் உள்ள மகாகவி பாரதியாரின் முழு உருவ கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் சுயபடம் எடுத்து தங்களுடைய கட்செவி அஞ்சல், சுட்டுரை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து, கண்ணியமான வாக்குப் பதிவுக்கு தங்களது உறுதியை அளிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சுயபடம் எடுக்கும் இடத்தை  புதுச்சேரி வடக்கு மாவட்ட துணை ஆட்சியரும், மக்களவைத் தொகுதியின் 5-ஆவது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான தி. சுதாகர் தொடக்கிவைத்தார்.
இதில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், சரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இளைஞர்கள் சுயபடம் எடுத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 
இந்த சுயபடம் எடுக்கும் இடம் புதிய வாக்காளர்களையும், இளம் வயது வாக்காளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து இளம் வயது வாக்காளர் பிரேமா (20) கூறியதாவது:
நிகழாண்டில் நான் முதல்முறையாக வாக்களிக்க உள்ளேன். இங்கு நான் சுயபடம் எடுத்து எனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளேன். 
இதன் மூலம் சிறந்த கண்ணியமான வாக்காளர் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இதை எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்து, வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com