கட்சியின் முடிவுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவணங்க வேண்டும் : கே.எஸ். அழகிரி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கட்சியின் முடிவுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவணங்க வேண்டும் : கே.எஸ். அழகிரி


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களில் 9 பேருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். மற்றவர்களுக்கு வருத்தம் வருவது இயல்புதான்.  எனக்குக்கூட இருமுறை துயரமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. முகையூர் மற்றும் கடலூர் தொகுதிகளில் இரு முறை என்னை வேட்பாளராக அறிவித்து, நானும் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில், பிறகு என்னை மாற்றிவிட்டனர். அப்போது ஒரு வாரம் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு, சமாதானமாகி காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்தேன்.
சுதர்சன நாச்சியப்பன் மிகவும் தகுதியானவர். அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கட்சியின் அகில இந்திய தலைமை ஒரு முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவை உடனே ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. 
சிவகங்கை தொகுதிக்கு 2 பேர்தான் விண்ணப்பித்திருந்தனர். அதில் 8 விண்ணப்பங்கள் கார்த்தி சிதம்பரத்துக்கும் சுதர்சன நாச்சியப்பனுக்காக ஒரு விண்ணப்பமும் வந்திருந்தது. இதில் ராகுல்காந்தி முடிவு எடுத்துள்ளார். உடனே, அதற்கு தலைவணங்க வேண்டுமே  தவிர, எதிராகப் பேசக்கூடாது. அப்படிப் பேசுவது என்பது கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகப் பேசுகிறோமா, கட்சி தலைமைக்கு எதிராகப் பேசுகிறோமா என்பதை அவர் யோசிக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி என்று ராகுல் முடிவெடுத்திருப்பதாக நான் கூறியது உண்மைதான்.  சிவகங்கையை போல இந்தியா முழுவதும் 40 காங்கிரஸ் தலைவர்களும் அவர் குடும்பத்தினருக்குச் சீட்டு கேட்பதால் தாமதம் ஆவதாகக் கூறினேன். இந்த விவகாரம் குறித்து மன்மோகன் சிங் ஆலோசித்து முடிவு எடுத்த பிறகுதான் சிவகங்கை வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதற்காக செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தின் மீது வழக்கு இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாஜகவை எதிர்ப்பதில் ப.சிதம்பரம் இந்திய அளவில்  மிக முக்கியமான தலைவராக உள்ளார். துல்லிய தாக்குதல் என்றாலே பாஜக மீது சிதம்பரம் நடத்தும் தாக்குதல்தான். ராகுல்காந்தியும், ப.சிதம்பரமும் இதுவரை கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் பாஜகவிடமிருந்து பதில் வரவில்லை. சிதம்பரத்தின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பாஜக அரசு ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. அவரைப் பணிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறது. ப.சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ கூறுகிறது. ஆனால், சிபிஐ நீதிமன்றமோ சிதம்பரம் மீது ஏதாவது குற்ற ஆவணத்தைக் கொடுத்தால் கைது செய்வதற்கான உரிமையைத் தருகிறேன் என்று கூறுகிறது. கடந்த 6 மாத காலமாக சிபிஐ ஆதாரத்தைத் தரவில்லை. இதிலிருந்து அது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றுதானே தெரிகிறது. 
தமிழகத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வர உள்ளனர். அவர்கள் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மார்ச் 27-ஆம் தேதி முதல் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com