சட்டப் பேரவை உறுப்பினர்களாலேயே ஆளுநர் தேர்வு : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால் சட்டப் பேரவை உறுப்பினர்களாலேயே ஆளுநர் தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்களாலேயே ஆளுநர் தேர்வு : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால் சட்டப் பேரவை உறுப்பினர்களாலேயே ஆளுநர் தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும், இதற்காக 500 திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படும். 
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வறுமை அகற்றப்படும். குடிசைகள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் வகுக்கப்படும். 
பெண்களுக்கு விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களின்  உரிமைகள் காக்கப்படும். ஊழலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்த சட்டத்தை இன்னும் வலுவாக்கி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 
தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படுவதோடு, மாநிலத்தில் கூட்டாட்சி முறை பின்பற்றப்படும். இதன்மூலம் மாநில ஆளுநர்கள் அந்தந்த மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் சென்னை உள்ளிட்ட 6 மண்டலங்களில் நிறுவ வலியுறுத்தப்படும். 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்படும். பெண்கள், குழந்தைகள் நலன் பாதுகாக்கப்படும். மக்கள் நலன் காக்க கல்வி, சுகாதாரம், நீர், ஆற்றல் மேம்பாடு, சுற்றுச்சூழல், சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். சமூகநீதியை நிலைநாட்ட 69 சதவீத இடஒதுக்கீடு தொடரப்படும். தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 
அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் 25 சதவீதம் பெண்களுக்கு உரிமை வழங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். விவசாயம், விவசாயிகளுக்கு உற்பத்தியில் 100 சதவீதம் லாபம் கிடைக்க திட்டங்கள் வகுக்கப்படும். 
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும். ரேஷன் பொருள்கள் அனைத்து வீட்டுக்கும் வழங்கப்படும். கல்வி உள்ளிட்ட பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஐந்து துறைகள் மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரப்படும். கிராமசபைகளுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படும். சுங்கக் கட்டணங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும். கூட்டுறவு மீன்பிடித்தல் மூலம் மீனவர்களின் வருமானம் மும்மடங்கு ஆக்கப்படும். தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 100 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com