மத்திய, மாநில அரசுகள் மீது பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர்: மு.க.ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகள் மீது பொதுமக்களுக்கு உள்ள வெறுப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
திருவள்ளூரை அடுத்த  காக்களூரில்  திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை  ஆதரித்துப் பேசிய திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின். (வலது) பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
திருவள்ளூரை அடுத்த  காக்களூரில்  திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை  ஆதரித்துப் பேசிய திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின். (வலது) பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.


மத்திய, மாநில அரசுகள் மீது பொதுமக்களுக்கு உள்ள வெறுப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் எ.கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கு.ஜெயகுமார் ஆகியோரை ஆதாரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: மக்களவைத் தேர்தலுடன், இடைத்தேர்தலும் நடப்பதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி, திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தற்போதைய தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. அதில், திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று சொன்ன பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்துள்ளார்.
அதேபோல், ஊழல் ஆட்சி நடந்து வருவதாக அடிக்கடி கூறி வந்த தேமுதிக மற்றும் பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். இதற்குக் காரணம் பணத்தாசையா, பதவியாசையா என்றால், காரணம் இரண்டுதான். அண்மையில், ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரையில் யாருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக மேடைதோறும் தமிழக முதல்வர் பேசி வருகிறார்.            
மத்தியில் பாஜக ஆட்சி மீதும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீதும் பொதுமக்கள் வெறுப்புடன் இருக்கின்றனர். இந்த வெறுப்பு தேர்தல் வாக்குப் பதிவில் எதிரொலிக்கும். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல்வேறு வகைகளில் போராடினர். பிரதமர் மோடி நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை அழைத்துப் பேசவில்லை. ஆனால், பெரிய முதலாளிகளை அழைத்துப் பேசுகிறார். இதுபோன்ற செயல்களுக்கு மக்களவைத் தேர்தலிலும், பேரவை இடைத் தேர்தலிலும் பொதுமக்கள் பதில் அளிப்பார்கள் என்றார் அவர்.     
திருக்கழுகுன்றத்தில்...
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  அதிமுகவை பிரதமர் மோடியிடம் அடகு வைத்துவிட்டனர் என்று திங்கள்கிழமை திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
திருக்கழுகுன்றம் பேருந்து
நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம்,  திருப்போரூர்  சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்  இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியது: 
பாஜகவும், அதிமுகவும் ஆட்சியில் இருந்தும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளனர். பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ளும் சுயநலம் மட்டும்தான் அவர்களிடம் உள்ளது. நான் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்துள்ளேன். ஆனால் தமிழகத்தில் உள்ள முதல்வரைப் போல் பார்த்ததில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.3,500 கோடி ஊழல் நடந்துள்ளது. அவரது உறவினர்கள் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கிலோ கணக்கில் தங்கம், கோடிக் கணக்கான பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.   
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டனர். 
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற மர்மம் நீடிக்கிறது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அதை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொடநாடு காவலாளி கொலை வழக்கு தொடர்பாக பங்களாவில் ஆதாரங்கள் உள்ளன என்றார் அவர். 
இதில், திமுக நிர்வாகிகள் தா.மோ. அன்பரசன், திருக்கழுகுன்றம் வி.தமிழ்மணி, மாமல்லபுரம் விஸ்வநாதன், சிவாஜி, அன்புச்செழியன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.                

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com