Enable Javscript for better performance
அரசியல் பரபரப்பு: மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... மகிழ்ச்சியுடன் வரவேற்ற கார்த்தி சிதம்பரம்..!- Dinamani

சுடச்சுட

    

    அரசியல் பரபரப்பு: மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... மகிழ்ச்சியுடன் வரவேற்ற கார்த்தி சிதம்பரம்..!

    By DIN  |   Published on : 27th March 2019 12:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nachi-karthi

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் மனகசப்புகளை மறந்து சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் நீண்ட இழுபறிக்கு பின்னர் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக முகுல் வாஸ்னிக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 

    இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சனநாச்சியப்பன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்சியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்துள்ளார்.

    நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.

    ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. கார்த்தி சிதம்பரம் ஒரு குற்றவாளியாக உள்ளதால் நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை?. நீதிமன்ற வாசலுக்கு  போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது க‌‌ஷ்டமாக உள்ளது என கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். 

    இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள், இந்நாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவணங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரியும், மன கசப்புகளை மறந்து கார்த்தி சிதம்பரம் தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என திருநாவுக்கரசரும் தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், தனது கருத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார். காரைக்குடியில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 20 நிமிடம் இவர்கள் ஆலோசனை நடத்தினர். 

    பின்னர் செய்தியாளர்களிடம் சுதர்சன நாச்சியரப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இருவரும் சேர்ந்து உழைப்போம். காங்கிரஸ் வெற்றிபெறுவதே எங்களுக்கு முக்கியம் என்றும், மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக கூறினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai