Enable Javscript for better performance
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: மருத்துவ பரிசோதனையில் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: மருத்துவ பரிசோதனையில் உறுதி 

    By DIN  |   Published on : 27th March 2019 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rape

    கோவை மாவட்டம், துடியலூர் அருகே காணாமல் போன 6 வயதுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. 

     துடியலூர் அருகே பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், வனிதா தம்பதிக்கு 6 வயது மற்றும் 3 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த இருக் குழந்தைகளும் திப்பனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பும், அங்கன்வாடியிலும் படித்து வந்தனர்.

     இந்தக் குழந்தைகளை பள்ளி நேரம் முடிந்ததும் அவர்களது தாத்தா தாமஸ் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இதேபோல இருவரையும் திங்கள்கிழமை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளார். பின்னர் மாலை 6 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுப் பெண் குழந்தை மாயமானதைக் கண்ட தாய் வனிதா அதிர்ச்சியடைந்தார்.

     இது குறித்து உடனடியாக துடியலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெ.நா.பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மணி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிசுந்தரம் உள்ளிட்ட போலீஸார் மாயமான குழந்தையை இரவு முழுவதும் அப்பகுதியில் தேடினர்.  ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. 

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வனிதாவின் வீட்டின் முன்புள்ள சந்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை காணப்பட்டது. உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வனிதா, பொதுமக்களின் உதவியுடன் துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. 

    குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் கோவை துடியலூர் சிக்னலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai