கேபிள் டி.வி.யை முடக்கியதே திமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

கேபிள் டி.வி.யை முடக்கியதே திமுகதான் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
மத்திய சென்னை தொகுதி பா.ம.க.வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து செவ்வாய்க்கிழமை சூளை அஞ்சல் நிலையப் பகுதியில் வாக்குச் சேகரித்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
மத்திய சென்னை தொகுதி பா.ம.க.வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து செவ்வாய்க்கிழமை சூளை அஞ்சல் நிலையப் பகுதியில் வாக்குச் சேகரித்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


கேபிள் டி.வி.யை முடக்கியதே திமுகதான் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால்,  தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை  பிரசாரம் மேற்கொண்டார்.  அவர்  திருவல்லிகேணி, சிந்தாதரிப்பேட்டை, அயனாவரம்,  சூளை, எம்.எம்.டி.ஏ. காலனி, புஷ்பாநகர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தார். 
பிரசாரத்தின்போது அவர் பேசியது:  மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறனை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாது. அவர் இந்தத் தேர்தலின்போது மக்களைச் சந்திக்க வருவார். மீண்டும் அடுத்த தேர்தல் வந்தால்தான் தொகுதிக்கு வருவார்.  
எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க வேண்டுமானால் அவர்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். 
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு  போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.   அதே நேரத்தில் தயாநிதி மாறன் மீது அந்நியச் செலவாணி வழக்கு ஒன்றும் அமலாக்கத் துறையால் தொடரப்பட்டுள்ளது.  
கட்டண சேனல்கள் இலவசமாகுமா?: கேபிள் டி.வியை  ஆரம்பித்தவுடன் அதை முடக்கியதே திமுகதான்.  குறிப்பாக மாறன் சகோதரர்கள்தான் இதற்கு முழு காரணம். தொலைக்காட்சி உலகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் இவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் மொத்தம் 40 சேனல்கள் உள்ளன. சன் டி.வி.யில் கட்டணம் பேக்கேஜ் மாதந்தோறும் 56 ரூபாய். தனியாக சன் டி.வி வேண்டுமானால் ரூ.19 செலுத்தினால்தான் பார்க்க முடியும். முதலில் இவர்கள் மக்களுக்கு இலவசமாக அந்த சேனல்களை கொடுக்கட்டும். மத்திய சென்னை தொகுதி வாக்காளர்களுக்காவது இலவசமாக கொடுக்க முன்வருவார்களா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவர்களால் தான் கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாகி உள்ளது.
வீராணம் திட்டம்:   திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்பதற்கு இன்றும் சான்றாக இருப்பது, வீராணம் குடிநீர் திட்ட ஊழல். இந்த திட்டத்திற்காக நிதியை வீணடித்ததோடு மட்டும் அல்லாமல் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா புதிய வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு குடிநீரை வழங்கினார். 
 சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு மெட்ரோ  ரயில் திட்டத்தைத் தொடங்கினார்.  ஆனால் அதற்கு பின்பு வந்த திமுக அரசு அதை கிடப்பிலே போட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா  மீண்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி, முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 54 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  தற்போது இரண்டாவது கட்டமாக 118.90 கி.மீ.  தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைப் பணிக்காக சுமார் ரூ.79 ஆயிரம் கோடிக்கு திட்ட  மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com