40 தொகுதிக்கும் 40 சின்னம் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம்: டிடிவி தினகரன் உறுதி

நீதிமன்ற அறிவுறுத்தல்படி, தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நிச்சயம் என்று அம்மா
40 தொகுதிக்கும் 40 சின்னம் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம்: டிடிவி தினகரன் உறுதி


நீதிமன்ற அறிவுறுத்தல்படி, தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நிச்சயம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து, சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அமமுக சார்பில் 59 பேர் போட்டியிட உள்ளனர். அந்த 59 பேரின் வெற்றி தமிழக மக்களின் ஆயுதங்களாக இருக்கும். சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. எங்களுக்கு பொதுச் சின்னம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, டிசம்பர் 7-ஆம் தேதி குக்கர் சின்னத்தை அளித்தார்கள். அதனை 21-ஆம் தேதி அந்தத் தொகுதி வாக்காளர்கள் வெற்றிச் சின்னமாக்கினர்.  எனவே, இந்தத் தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிடுவோம்.   மாபெரும் வெற்றியைப் பெறுவோம். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவு தொடர்பான நகலை எங்களது வழக்குரைஞர்கள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் சுயேச்சையாக மனுக்களை தயார் செய்து வைத்திருந்தோம். சின்னம் கோரும் இடத்தில் இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவைத் தெரிவித்துள்ளோம்.

கட்சியைப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம். எனவே, கட்சியைப் பதிவு செய்வதற்கான பணிகளில் இறங்குவோம். சின்னம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றோம். வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதால் அமமுகவைச் சேர்ந்த 59 பேருக்கும் பொதுச் சின்னம் கொடுக்கச் சொல்லியுள்ளது.

இரட்டை இலை தொடர்பான வழக்கினை தள்ளுபடி செய்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது.

டிடிவி தினகரனின் 59 வேட்பாளர்கள்தான் மக்களின் ஆயுதம். எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் ஆயுதம் அவர்கள்தான். தேர்தலில் போட்டியிட அனைவரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தனியாக சின்னங்களைக் கொடுத்தாலும் அந்த சின்னங்களுக்கு வாக்களிக்க மக்கள் நினைத்தால் மறுக்க முடியாது. எனது பயணம் தொடரும். அதிமுகவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.  

இன்று பிரசாரம்: ராயபுரத்தில் இருந்து எனது தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மார்ச் 27) தொடங்க உள்ளேன் என்றார் டிடிவி தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com