சிறப்பு செலவினப் பார்வையாளர் இன்று தமிழகம் வருகை: தேர்தல் பணியில் பொதுப் பார்வையாளர்கள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மது மகாஜன் புதன்கிழமை தமிழகம் வரவுள்ளார். 
சிறப்பு செலவினப் பார்வையாளர் இன்று தமிழகம் வருகை: தேர்தல் பணியில் பொதுப் பார்வையாளர்கள்


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மது மகாஜன் புதன்கிழமை தமிழகம் வரவுள்ளார். 
இதேபோன்று, தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்களும் தங்களை பணிகளைத் தொடங்கினர். தமிழகத்தில் மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 1,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், அரசு, தனியார் சுவர்களில் விளம்பரங்கள் செய்தது தொடர்பாக 929 வழக்குகளும், இந்திய தண்டனைச் சட்டம் 171-ஆவது பிரிவின் கீழ் (வாக்காளர்களுக்கு சட்ட விரோத வகையில் பணம் அளிப்பது, தவறான வாக்குறுதிகள் அளிப்பது போன்ற செயல்கள்) 35 வழக்குகளும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எந்த மாவட்டத்தில் அதிகம்: சுவர் விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து, மதுரை, தேனி, திருப்பூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான இடங்களின் சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுயேச்சைகள் போட்டியிடுவதற்காக 198 சின்னங்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்கள். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கோரினால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க சி-விஜில் எனும் செல்லிடப்பேசி செயலி செயல்பாட்டில் உள்ளது. இந்த செயலி வழியாக இதுவரை 968 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதாவது, அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியது, ஒலிபெருக்கிகளை இரவு நேரங்களில் பயன்படுத்தியது, மத-ஜாதி ரீதியான பேச்சுகள், உரிய அனுமதி இல்லாமல் விளம்பரங்களைச் செய்தது, பண விநியோகம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று வருகை: மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நபர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுகிறது.  வேட்புமனு பரிசீலனையானது பொதுப் பார்வையாளர் முன்னிலையில் நடைபெறும். இதற்காக, தொகுதிக்கு தலா ஒரு பொதுப் பார்வையாளர் வீதம் அனைத்துத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்ய சிறப்பு செலவினப் பார்வையாளராக மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை தமிழகம் வரவுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கெனவே 67 ஆயிரத்து 664 வாக்குச் சாவடிகள் உள்ளன. தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், துணை வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுத்து அறிவிக்கும் என்றார் சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com