
கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் அடிமட்ட தொண்டரும் முதல்வராக முடியும் திமுகவில் வாரிசுகள் மட்டுமே கோலோச்ச முடியும் என்றார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட கட்சிகள் அதிமுக தலைமையில் ஓரணியாகவும், மக்கள் உரிமைகளை, நீராதார உரிமைகளை பாதுகாக்கத் தவறியவர்கள் திமுக தலைமையில் ஓரணியாகவும் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றனர். மத்தியில் காங்கிரஸ்-
திமுக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியிலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியவர்கள் யார் என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 4 அணைகளை கட்டியதற்கு திமுக ஆட்சேபம் கூட தெரிவிக்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு வந்து சேரும் நீரின் பங்கு குறைந்து, காவிரி டெல்டா மாவட்டங்கள் வறண்டு போயின.
இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றபோது, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. தமிழகத்துக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. ரூ.1,400 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை, பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தன. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது.
அதேபோல, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, சட்டப் போராட்டம் நடத்தி 2013-இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார். இதன் மூலம் நீராதார உரிமை பாதுகாக்கப்பட்டது.
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதே திட்டங்கள் தற்போதும் தொடர்கின்றன. அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, சாதி, மத மோதல்கள் போன்ற பிரச்னைகள் இருந்தன. அதனால், திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகிறது.
மு.க.ஸ்டாலினோ, தேர்தலுக்காக பல்வேறு வேடங்கள் போட்டு பொதுமக்களைக் கவர முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி மக்களிடம் எடுபடவில்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டரும் முதல்வராக முடியும். திமுகவில் வாரிசுகள் மட்டுமே கோலோச்ச முடியும். ஆகவே, தமிழகத்தில் நல்லாட்சி தொடரவும், மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.