Enable Javscript for better performance
என்னை அடையாளம் காட்டியது ராமதாஸா? கொதிக்கும் திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

  

  என்னை அடையாளம் காட்டியது ராமதாஸா? கொதிக்கும் திருமாவளவன்

  By DIN  |   Published on : 28th March 2019 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srt

  திருமாவளவனை நான்தான் அடையாளம் காட்டினேன். அது நான் செய்த தவறு என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார் இதற்கு என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றிவருகிறார் என  பதிலளித்துள்ளார் திருமாவளவன்.  

  கடந்த செவ்வாய்கிழமை சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து பிரசாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், சிதம்பரம் தொகுதியில் எங்களை எதிர்த்துப் போட்டியிடும் திருமாவளவனுக்கு அடையாளம் தந்தது நான்தான்.

  மதுரையில் இருந்தவரை அழைத்து வந்து வடலூரில் கூட்டம் ஒன்றில் முதன்முதலாகப் பேச வைத்தோம். பின்னர், அவரோடு கூட்டு சேர்ந்தோம். திருமாவளவன் ஒரு முறை என்னிடம், நீங்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசியல் பயிலரங்கம் நடத்துகிறீர்கள் என்றும், ஆனால் எனது கட்சியினர் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறார்கள்; அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

  தற்போது அவரது கட்சிக் கொடியை எங்கு பார்த்தாலும் மக்கள் முகம் சுளிக்கிறார்கள். ஏனெனில் இளைஞர்களுக்கு அவர் தவறாகப் பயிற்சி கொடுத்துள்ளார்.

  350 சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டி பல்வேறு மாநாடுகளை நடத்தினேன். சமுதாய நல்லிணக்க மாநாடு, ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினோம். அதில் திருமாவளவனும் பங்கேற்றார். பல முறை அவரிடம் அறிவுரை கூறியும் கேட்கவில்லை. தமிழ்ச் சமுதாயத்துக்கு பயன்படுவார் என அவரை அறிமுகப்படுத்தி, ஒரு தலைவராக ஊடகங்கள், பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளச் செய்தது நான் செய்த தவறு என்று பேசினார்.

  இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்களின் கூட்டத்தில்  திருமாவளவன் பேசுகையில், “என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறிய ராமதாஸ், ‘திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போகக் கூடியது. ஆகவே, திமுகவிலிருந்து வெளியே வர வேண்டும்’ என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்தே ராமதாஸ் என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றிவருகிறார். நான் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக இருக்கிறேன்.

  திமுகவில் சீட்டு மட்டுமே கிடைக்கும்; நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டியே, ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்ததுடன், ஊழல் புத்தகம் வெளியிட்ட ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

  அதிமுக - பாமக அமைந்துள்ள கூட்டணி வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உருவான கொள்கை கூட்டணி. அதிலும் விசிக நிபந்தனையற்ற கூட்டணி என்று அறிவித்தது. 

  நம் கூட்டணியில் ஒரே குரல்தான் ஒலிக்க வேண்டும். அது மோடியை விரட்டியடித்து ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்ற குரலாகதான் இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai