Enable Javscript for better performance
காவிரி பிரச்னைக்காக திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னைக்காக திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

    By DIN  |   Published on : 28th March 2019 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps

    தென் சென்னை மக்களவை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சென்னை சோழிங்கநல்லூர் கந்தன்சாவடி பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


    கடந்த 2007-இல் காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்தபோது, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக காவிரி பிரச்னைக்காக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
    தென் சென்னை மக்களவை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம், திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பல்வேறு இடங்களில்  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், கந்தன்சாவடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பல்வேறு நிறுவனங்கள் மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதனால், ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில்கள் உருவாக்கப்படவுள்ளன. 10.50 லட்சம் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
    கூட்டணி வைப்பது நடைமுறை: அதிமுக தலைமையிலான கூட்டணியைப் பார்த்து, இந்தக் கட்சியுடன் ஏன் கூட்டணி சேர்ந்தீர்கள், அந்தக் கட்சியுடன் ஏன் அணி சேர்ந்தீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சியோடு கூட்டணி வைப்பது நடைமுறைதான். ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, கூட்டணியை அமைத்துள்ளோம். இது அந்தந்த கட்சிகளுடைய விருப்பம். இதைச் சொல்வதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது.
    பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுக மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகப் பேசுகிறார். திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. பாஜக அமைச்சரவையிலும் திமுக அங்கம் வகித்தது. திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. எங்களுடன் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா. இது என்ன நியாயம்.
    திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போது தமிழகத்துக்காக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரத்தில் இருக்க வேண்டுமென நினைக்கும் கட்சி திமுக. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கான கட்சி அதிமுக. அந்த சுய உணர்வோடுதான் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளோம். யாரிடத்திலும் கட்சியை அடகு வைக்க வேண்டிய நிலை எங்கள் கட்சிக்கு ஏற்பட்டது இல்லை. இனியும் ஏற்படப் போவதில்லை.
    காவிரி பிரச்னை: கடந்த 2007-இல் காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்த போது, அதில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. அப்போது காவிரி பிரச்னைக்காக திமுக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதே முயற்சி எடுத்திருந்தால் காவிரிப் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதிமுக அரசு அமைந்த பிறகுதான் காவிரிப் பிரச்னை ஒரு முடிவு வந்திருக்கிறது. விவசாயிகளின் பாதுகாவலனாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். இதேபோன்று, மக்களவைத் தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றும்.
    சாதாரண மக்களின் அன்பைப் பெற்றவர்கள் நாங்கள். அதனால்தான் பொது மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என்று பேசினார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai