Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 28th March 2019 11:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SUPREMEcourtcut


    புது தில்லி: திருப்பரங்குன்றம் உட்பட 3 தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

    தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

    அப்போது, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் உட்பட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த முடியாது என்றும், சரியான நேரத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படும், அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

    இதனைக் கேட்ட திமுக தரப்பு வழக்குரைஞர், ஏப்ரல் 18ம் தேதியன்று இல்லையென்றாலும், மக்களவைத் தேர்தல் நடக்கும் அடுத்தடுத்த தேதிகளில் கூட 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என்று வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றால் 24 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பதிலளித்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். மேலும், உரிய நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தி, திமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.

    வழக்கின் பின்னணி: 
    மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டது. அதில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணமாகக் காட்டி எஞ்சியுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த வழக்குகளால் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை. எனவே, எஞ்சியுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான மார்ச் 26-ஆம் தேதிக்குள் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் சர்மா, இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த அவகாசம் வேண்டும். எனவே, 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

    இருதரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-க்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.யு. சிங், பி. வில்சன் ஆகியோர் ஆஜராகி, தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. மூன்று தொகுதிகளில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள தொகுதி தொடர்பான வழக்கு தேர்தல் நடத்துவதற்கு எதிராக இல்லை. எனவே, ஏப்ரல் 8-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டனர். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மார்ச் 28-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். 

    தேர்தல் ஆணையத்தில் முறையீடு: இதனிடையே, 3 தமிழக பேரவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீண்டும் மனு அளித்தனர்.

    ஆனால், தற்போதைக்கு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், அதன் பதிலை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக இடைத் தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai