Enable Javscript for better performance
பொது மக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே செம்மொழிப் பூங்கா : உச்சநீதிமன்றம் தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொது மக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே செம்மொழிப் பூங்கா : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme-court


    சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    செம்மொழிப் பூங்கா அமைந்துள்ள பகுதியை தமிழக அரசு தி அக்ரிகல்சுரல் சொஸைட்டி என்ற அமைப்புக்கு கடந்த 1980, ஏப்ரல் 28-ஆம் தேதி அளித்தது. அவ்வாறு அளித்த போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தவும், தோட்டக்கலையை மேம்படுத்தவும் வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 
    இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சொஸைட்டி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஒரு நபர் நீதிபதி அமர்வு, அரசாணையை 1998, ஜூன் 19-ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த அமர்வு, ஒரு நபர் நீதிபதியின் உத்தரவை கடந்த 2008, ஏப்ரல் 11-ஆம் தேதி ரத்து செய்தது.
    இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சொஸைட்டி சார்பில் வி. கிருஷ்ணமூர்த்தி என்பவர், 2008 மே 16-இல் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் ஏ.எம். சாப்ரே, தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
    நிலம் கையகப்படுத்துதல் அரசின் உரிமையாகும். பொதுமக்கள் நலனுக்காக நிலத்தை அரசு கையகப்படுத்த முடியும். அரசு சரியான முறையில் நிலத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ளது. மனுதாரர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்போது ஆட்சியிலிருந்த கட்சி நடவடிக்கை எடுத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்த கருத்தில் உடன்படுகிறோம். எனவே, வழக்கில் தொடர்புடைய நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மனுதாரருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பொருத்தமற்றதாகும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai