Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    STERLITE


    ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
    சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் தமிழக அரசிடம் இல்லை. எனவே ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக் கோரிய இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்; வழக்கைத் தேர்தலுக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
    அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமாசுந்தரம், இந்த வழக்கில் மூன்றாவது நபரை சேர்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை மூன்றாவது நபரின் கருத்தைக் கேட்கக்கூடாது.  என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வைகோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், என்னை ஒரு மனுதாரராக கடந்த 2013-ஆம் ஆண்டே உறுதிப்படுத்தி உள்ளது. 
    மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான வாதங்களை மட்டுமின்றி, ஆலைக்கு எதிரான வாதங்களையும் விசாரித்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார். 
    அதைத் தொடர்ந்து வாதிட்ட ஆர்யமாசுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக  மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளன. ஆலை பராமரிப்புப் பணிகளுக்கு குறைவான அளவே மின்சாரம் தேவைப்படும். எனவே ஆலையின் பராமரிப்புப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை நீண்டகாலத்துக்கு ஒத்திவைக்காமல் விரைவாக விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே பல வழக்குகள் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வழக்கை அவசரமாகவோ முன்னுரிமை கொடுத்தோ விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். 
    அப்போது தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மாசு குறைந்துள்ளதா, நிலத்தடி நீரின் தரம் உயர்ந்துள்ளதா என்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai