
அமமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணனை ஆதரித்து ராயபுரத்தில் புதன்கிழமை பிரசாரம் செய்த அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அமமுகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் ஆளுங்கட்சியினர் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் தனது தேர்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
சென்னை வடக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரத்தில் வேனிலிருந்தவாறு கட்சியின் வேட்பாளர் பி. சந்தானகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய தினகரன் பின்னர் காசிமேடு, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
பின்னர் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பொன்ராஜாவை ஆதரித்து மாதவரம், மீஞ்சூர், பொன்னேரியில் பிரச்சாரம் செய்த தினகரன் கும்மிடிபூண்டியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தினகரன் பேசியது: ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியின் சின்னத்தை பெறுவதற்கு கூட ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி இவ்வளவு அழுத்தம், நெருக்கடி கொடுக்கின்றனர். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் ஆளுங்கட்சியின் அடக்குமுறைகள் தொடர்கின்றன.
ஆனால், மக்கள் ஆதரவுடன் அவற்றை எதிர் கொள்வோம். மக்கள் ஆதரவு இருக்கும்போது வெற்றி பெறுவதற்கு சின்னம் ஒரு பிரச்னை இல்லை. எந்தச் சின்னத்தை வழங்கினாலும் தமிழகம் முழுவதும் வெற்றி கொள்வோம். அ.ம.மு.க.விற்கு ஒரு அடையாளத்தை வழங்கிய ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நான் எப்போதும் மறப்பது இல்லை. எனவே தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஆர்.கே.நகரை உச்சரிக்க மறப்பதில்லை. ஏனெனில் நான் வந்த வழியை என்றைக்கும் மறந்தது கிடையாது.
தமிழகத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அ.ம.மு.க. நடைபெற உள்ள தேர்தலில் முழு வெற்றி பெறும் என்றார் தினகரன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...