
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 2 ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி வெளியிடுகிறார் என்ற தகவல் தெற்போது வெளியாகி உள்ளது.
17-வது மக்களவைக்கான தேர்தலுக்கான நாட்கள் அருகாமையில் உள்ள நிலையில், தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜக என்ற படகை மூழ்கடிப்பதற்கான பல வியூகங்களை வகுத்து அறிக்கை பணியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப் போவதாக ராகுல் அறிவித்துள்ளார். ராகுலின் அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ராகுலின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தில்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 திட்டம், 25 கோடி பேருக்கு மாதம்தோறும் ரூ.6000 வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், இட ஒதுக்கீட்டு அதிகரிப்புக்கான திட்டம், பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி, இளைஞர்கள் தொழில் தொடங்க அரசிடம் அனுமதி பெறும் முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...