
கோவை மாவட்டம், துடியலூர் அருகே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயதுப் பெண் குழந்தை தொடர்ச்சியாக பல நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, குற்றவாளிகள் குறித்து துப்புக் கொடுக்கும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதால் காவல்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பே பல நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது காவல்துறைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துடியலூர் அருகே பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூரில் 6 வயதுப் பெண் குழந்தை திங்கள்கிழமை காணாமல் போனது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டின் அருகிலேயே உடலில் காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததும், குழந்தையின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தனர்.
மேலும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீஸார் திருப்பிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மாடசாமி, முருகசாமி, பெரியநாயக்கன்பாளையம் சரக துணைக் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் இவ்வழக்கில் காவல் துறையால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
ஆனால், அதில் சமரசம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியினர், மாதர் சங்க நிர்வாகிகள் இணைந்து மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும் கோவை வடக்கு கோட்டாட்சியர் டெய்ஸி குமார், கோவை வடக்கு வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வெள்ளிக்கிழமை மாலைக்குள் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்களின் 4 மணி நேர மறியல் போராட்டம் பிற்பகல் 1 மணியளவில் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு...
பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை, போக்ஸோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தையின் சடலம் அடக்கம்...
பின்னர், போலீஸாரின் சமரசத்தைத் தொடர்ந்து குழந்தை உடலை தாய் வனிதா பெற்றுக் கொண்டார். பின்னர் போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் பன்னிமடையில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெற்றோர் புகார்...
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆட்சியர் கு.ராசாமணியிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
பின்னர் குழந்தையின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை மாயமானது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தோம். இதற்கிடையில் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக எனது வீட்டின் அருகே உள்ள ஐந்து பேர் மீது சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம்.
ஆனால், காவல் துறை தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்த வேண்டும். எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
இது குறித்து ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுமி மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளது.
போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதால் சிபிசிஐடி போன்ற வேறு விசாரணை வழக்கை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...