போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

சென்னை: போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரில் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சனைகள் மீது உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.  அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் நேரடியான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணா தொழிற்சங்க பேரவையை சார்ந்த ஊழியர்கள் பெரும்பாலும் இந்தப்பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. இவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வெளிப்படையான, நியாயமான தேர்தல் நடத்துவதுதை கேள்விக்குறியாக்கும். எனவே, நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்துவதை உத்திரவாதம் செய்யும் வகையில் போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியில் திருமதி ச.மாலதி, கோடடாட்சியர் அவர்கள் மதுராந்தகம் தொகுதி தேர்தல் அலுவலராக பணியாற்றுகிறார். இவர் அத்தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் மருமகள் ஆவார். மேலும் இவர் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமான அணுகுமுறைகளை கையாளுவதாலும் அவரை இடமாற்றம் செய்ய ஆவன செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தல் நாளன்று வாக்கு அளிக்க உதவியாக அன்று விடுமுறை அறிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும்,  பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் அதை ஏற்காமல், வாக்களிக்க சில மணி நேரமே அவகாசம் அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து ஐ.டி. நிறுவனங்களும் ஐ.டி. ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு நாளன்று  விடுமுறை அளிக்க வேண்டுமென கோரப்பட்டது.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில்  வாக்கு சேகரிக்க சிறு குழுக்களாக செல்லும்போது காவல்துறை முன் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர். இது வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் ஜனநாயக உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய காவல்துறையின் கெடுபிடிகள் ஏற்புடையது அல்ல என்றும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தங்களது ஆட்சேபணையைத் தெரிவித்தனர்.

மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார்,  ஜி.உதயகுமார் ஆகியோர் தலைமைத்தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனை கவனத்துடன் பரிசீலிப்பதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். அவர் கூறிய அடிப்படையில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com