பொள்ளாச்சி வழக்கை இன்னமும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர் நீதிமன்றம்

பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்த பிறகும், வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொள்ளாச்சி வழக்கை இன்னமும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர் நீதிமன்றம்


பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்த பிறகும், வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த வழக்கில், வார இதழ் ஆசிரியருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை விசாரித்த நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்த பிறகும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான வழக்கு விவரங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, வார இதழ் ஆசிரியர் நாளைக்கு பதிலாக ஏப்ரல் 1ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வார இதழ் ஆசிரியருக்கு சிபிசிஐடி போலீஸ் தரப்பில் இருந்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருநாவுக்கரசை நான்கு நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவருடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், முகநூல் நண்பர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த பார் நாகராஜன், திமுகவின் கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் (27) ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடிபோலீஸார் சம்மன் அனுப்பினர். 

இதில், மார்ச் 28 ஆம் தேதிக்குள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்மன் அனுப்பியதன்பேரில் ஆஜரான பார் நாகராஜிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். 

தேனியைச் சேர்ந்த கண்ணன் என்பவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அவர் யூ டியூப் இணையதளச் சேனல் நடத்தி வருவதாகவும், இதில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விடியோக்களைப் பதிவேற்றியதும் தெரியவந்தது. 

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் தேனி கண்ணனிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவது குறித்து யோசித்து முடிவெடுக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என தென்றல் மணிமாறன் தரப்பு வழக்குரைஞர்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக செய்திகள் வெளியிட்ட வார இதழ் ஒன்றின் ஆசிரியருக்கு சிபிசிஐடி ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது. 

இதில் மார்ச் 25ஆம் தேதிக்குள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மார்ச் 30 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு வார இதழின் ஆசிரியருக்கு சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வார இதழ் ஆசிரியர் முறையீடு செய்ததை அடுத்து, நீதிமன்றம் தமிழக அரசிடம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com