
சோதனையின் முடிவில் கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதால் எதையும் பறிமுதல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்திருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும், அவரது மகனும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நிறைவு பெற்றதாக, துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
"நேற்று இரவு 8.30 மணியளவில் தொடங்கிய சோதனை தற்போது முடிவுற்றிருக்கிறது. சுமார் 24 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். வீடு, கல்லூரிகளில் பணம் இருக்கிறதா என்று தேடி பார்த்தார்கள். இன்று காலை 8 மணியில் இருந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக கல்லூரியில் சோதனை நடத்தினார்கள். கல்லூரியின் தலைவர் அறை முதல் எல்கேஜி வகுப்பறை வரை என அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் 40 பேர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, இந்த சோதனை நிறைவுற்ற பிறகு கணக்கு வழக்குகள் சரியாக உள்ளது, அதனால் எதையும் கைப்பற்றவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
எங்கள் தேர்தல் பணியை நிறுத்தி, உளவியல் ரீதியிலான பிரச்னை கொடுத்து சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.
கோடி கோடியாக பணம் இருக்கும், கூடை கூடையாக எடுத்துச் செல்லலாம் என்று நினைத்திருப்பார்கள். நான் அதிகாரிகளை குறை கூறவில்லை. அவர்கள் ஏவப்பட்டவர்கள். எடப்பாடி, மோடி அரசு கைகோர்த்து ஏளனம் செய்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...