89-ஆம் ஆண்டு நினைவு தினம் : உப்பு சத்யாகிரகப் போராட்ட தியாகிகளுக்கு வேதாரண்யத்தில் அஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் 89- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நினைவுத் தூண் அருகே காங்கிரஸ்
வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுத் தூண் வளாகத்தில் உப்பை அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர். 
வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுத் தூண் வளாகத்தில் உப்பை அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர். 


நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் 89- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நினைவுத் தூண் அருகே காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை உப்பை அள்ளி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் வேதாரண்யத்தில் 1930 -ஆம் ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. 
சர்தார் வேதரத்னம் போன்றோர் இப்போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்தனர்.இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30- ஆம் தேதி உப்பை அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்புச் சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே தியாகிகளுடன், சமூக ஆர்வலர்கள், காங்கிரஸார் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை உப்பை அள்ளி சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.முன்னதாக, வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்தில் உள்ள சர்தார் வேதரத்னம், தியாகி வைரப்பன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர், தேசபக்தி பாடல்கள் ஒலிக்க, மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன் தலைமையில் யாத்திரை புறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஏ. கோபண்ணா யாத்திரையை தொடங்கி வைத்தார். கடந்த 1930 -ஆம் ஆண்டு போராட்டம் நடந்த நாளில், அதில் பங்கேற்றவர்கள் சென்ற பாதை வழியாகச் சென்ற இக்குழுவினர், அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவுத் தூண் வளாகத்தை அடைந்ததும் சிறுவர், சிறுமிகள் உப்பு அள்ளுவதை தொடங்கி வைத்தனர். பின்னர், மற்றவர்கள் உப்பை அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில், சர்தார் வேதரத்தினத்தின் பேரன்களான குருகுலம் நிர்வாகிகள் அ. வேதரத்தினம், அ. கேடிலியப்பன், திருச்சியில் இருந்து யாத்திரையாக வந்தடைந்த தண்டியாத்திரை கமிட்டி செயலாளர் சக்திசெல்வகணபதி, காந்தி அறக்கட்டளை நிறுவனர் தளபதி மாணிக்கம் மற்றும் குழுவினர், 96 வயதான தியாகி சாட்டியக்குடி க. சம்பந்தம்பிள்ளை உள்ளிட்டோர் உப்பு அள்ளினர். 
பின்னர், நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் மாணவியர் பங்கேற்று தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். 
இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், நிர்வாகிகள் ஜி. சங்கரவடிவேல், சி.கே. போஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையினர், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com