புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அமைச்சரவையின்
புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு


புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அமைச்சரவையின் அறிவுரையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனு விவரம்: மத்திய அரசு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசு ஆவணங்களைக் கோரவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவின் காரணமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிடுகிறார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளுக்கு அவரே தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே உள்ளது. எனவே, மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீர்ப்பு விவரம்: யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். துணை நிலை ஆளுநருக்கென்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேச சட்டத்தில் அவருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. தேவையான சமயத்தில் அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டப்பேரவைக்குத் தான் மாநில அளவில் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை.
ஆளுநருக்கும் மாநில அமைச்சரவைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலில், சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் குடியரசுத் தலைவர் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும். 
மேலும், மாநில முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும். யூனியன் பிரதேச சட்டப்பிரிவு 44-இன் கீழ் ஆளுநருக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக ஆளுநர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது தலையீடு செய்யவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக மற்றொரு அரசாங்கத்தை நடத்தவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே, மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஆகிய நாள்களில் பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளும் செல்லாது. அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அமைச்சரவை எடுக்கின்ற முடிவுகளைத்தான் ஆளுநர் பின்பற்ற வேண்டும். அதே போன்று அரசு அதிகாரிகள் தன்னுடன் கட்செவி (வாட்ஸ் ஆப்) மூலம் தொடர்பில் இருக்க வேண்டும். அரசின் நிர்வாக முடிவுகளைத் தனக்கு தெரிவிக்கவேண்டும் என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட முடியாது.
புதுச்சேரி மாநில அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு நீடித்தால் அது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும். எனவே அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சரவை அதிகாரத்துக்கு உள்பட்டே செயல்பட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் 
குறிப்பிட்டுள்ளார்.
புதுவை முதல்வர் வரவேற்பு
 தீர்ப்பு குறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:


இந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்குத்தான் முடிவு எடுக்கும் முழு அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநருக்கென்று தனிப்பட்ட  அதிகாரம் ஏதும் இல்லை. நிர்வாகம், அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், நிதிஆதாரத்தை முடிவு செய்தல் உள்ளிட்டவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உண்டு. அரசின் முடிவுக்கு துணை நிலை ஆளுநர் துணை நிற்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தீர்ப்பில் இருக்கும் அம்சங்களைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக திரும்பத் திரும்பக் கூறி வந்தேன். எனது கருத்தை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பு மூலம் புதுவையில் இனிமேல் நலத் திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும். ஆளுநர் கிரண் பேடியின் சர்வாதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்த, இந்தத் தீர்ப்பு வழி செய்யும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்
ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்து:


உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்.  அதன்பின்னரே, அதுதொடர்பாக தெரிவிக்கமுடியும். ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 22.3.2018-இல் வெளியிட்ட தீர்ப்பில்,  யூனியன் பிரதேச நிர்வாகிக்கு (துணை நிலை ஆளுநர்), முதல்வர் தலைமையிலான முடிவுகளுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் இயங்க அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தனி நபருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதுவை ஆளுநர் மாளிகை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. யூனியன் பிரதேசத்தில் முழுமையான நேர்மை, பொறுப்புடன் நிதி மேலாண்மையைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com