உதகையில் கோடை விழா தொடக்கம்: தேர்தல் நடத்தை நெறிமுறையால் எளிமை 

உதகையில் கோடை விழா புதன்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருப்பதால் எளிமையாக இவ்விழா நடத்தப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடிய சிறுமியர்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடிய சிறுமியர்.


உதகையில் கோடை விழா புதன்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருப்பதால் எளிமையாக இவ்விழா நடத்தப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
உதகையில் கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத்தில் தோட்டக் கலைத் துறை சார்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும், இரண்டாவது வாரத்தில் உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும்,  மூன்றாவது வாரத்தில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சியும், நான்காவது வாரத்தில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், மாத இறுதியில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், நடப்பு ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் மே 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மலர்க் காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் பழக்காட்சியும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடை விழா புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
வழக்கமாக கோடை விழா  நிகழ்ச்சிகள் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கும். நடப்பு ஆண்டில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காரணமாக எளிமையான வகையில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3.80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதனால், மே மாதத்திலும் சுற்றுலாப் பயணிகளின் என்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காவல்துறை சார்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாலை விதிகளை சுற்றுலாப் பயணிகள் மதிப்பதோடு, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை நீலகிரிக்குள் கொண்டு வராமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 
பேட்டியின்போது தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உடனிருந்தார். இந்நிகழ்ச்சியில் பரத நாட்டியம், நீலகிரியின் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com