தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு


தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம்,  பெருங்களத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா, கவிதா, இந்திராகாந்தி, ஜோதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை எனக்கூறி எங்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் 2019ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகும் வரை எங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. நாங்கள் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் முனுசாமி, தமிழக அரசு கடந்த 2012 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியுள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை தகுதித் தேர்வை நடத்துகிறது. மனுதாரர்கள் இந்த தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறாமல், கடைசி நேரத்தில் இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்துள்ளனர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டிருந்தார். 
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 60 ஆயிரம் பேர் ஆசிரியர் பணிக்காக ஆவலுடன் காத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. எனவே தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பதவியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்குத்தான் ஆசிரியர் பணியை வழங்க வேண்டும் என தேசிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு  நம் குழந்தைகளின் கல்வியுடன் சம்பந்தப்பட்டது. எனவே தமிழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை கண்டிப்புடன் எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிபந்தனை விதியின்படி தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத பணியாளர்களுக்கு கால அவகாசம் வழங்க உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் அந்த கால அவகாசத்துக்குள் அந்தப் பணியாளர் தேர்ச்சிப் பெறவில்லை என்றால், அவரை பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. 
மனுதாரர்களுக்கு  வாய்ப்புகள் கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழக்கைத் தொடர்ந்துள்ள 4 ஆசிரியர்களுக்கும் இதுவரை அவர்கள் பணியாற்றியதற்கான ஊதியத்தை அரசு இரண்டு வார காலத்துக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர் பதவிக்காக தேசிய ஆசிரியர் கவுன்சில் நிர்ணயித்துள்ள அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அரசு நியமிக்க வேண்டும். 
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அனைவருக்கும் விளக்கம் கேட்டு இரண்டு வார காலத்துக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 
இதற்கு தகுந்த பதிலளிக்க அவர்களுக்கு 10 நாள்கள் கால அவகாசம் வழங்கி, அவர்களது விளக்கத்தைப் பெற்ற பின்னர் சட்டப்படி அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com