தார்மிக அடிப்படையில் கிரண் பேடி பதவி விலக வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அராஜக போக்கு காரணமாக வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்குப் பொறுபேற்று தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும்
தார்மிக அடிப்படையில் கிரண் பேடி பதவி விலக வேண்டும்: நாராயணசாமி


புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அராஜக போக்கு காரணமாக வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்குப் பொறுபேற்று தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:  மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.  அப்போது முதல் புதுச்சேரி அரசின் அன்றாட அலுவலில் அவர் தலையிட ஆரம்பித்தார். முதல்வர், அமைச்சர்களுக்கு தகவல் அளிக்காமல் அதிகாரிகளை  ஆளுநர் இல்லத்துக்கு அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் முறையிட்டேன். கூட்டாட்சி குறித்து ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் பிரதமர் மோடி,  உண்மையிலேயே சர்வாதிகாரத்தைத்தான் விரும்புகிறார். சர்வாதிகாரம்தான் பாஜகவின் தத்துவமாகவும் உள்ளது. 
தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கேஜரிவால் வழக்குத்  தொடுத்தார்.  அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் அறிவுரையின்படியே செயல்பட  வேண்டும்.  துணைநிலை ஆளுநருக்கென தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை.  சட்டப்பேரவைக்குத்தான் மாநில அளவில் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மோடி அரசுக்கும்,  கிரண் பேடிக்கும் விழுந்த பலத்த அடியாகும். கிரண் பேடியின் அராஜக போக்கு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக புதுச்சேரியில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. இதற்குப் பொறுப்பேற்று தார்மிக அடிப்படையில் கிரண் பேடி, துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார் நாராயணசாமி.
தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்த வேண்டும்: இதனிடையே, புதுச்சேரியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலையொட்டி அமலில் உள்ள தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்தக் கோரி  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டான்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த மார்ச் 10 முதல் அமலில் உள்ளன. இந்நிலையில், இரண்டு தேர்தலும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருப்பதால், குடிநீர் பிரச்னை, பொது சுகாதாரம் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்த இயலவில்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23இல் நடைபெறவுள்ளது. இதனிடையே, ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக தேர்தல் நடத்தை நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். கோரிக்கையை பரிசீலித்து வியாழக்கிழமை முடிவு எடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com