பிரசாரம்: பெயர்ப் பட்டியல் அளிக்காத அதிமுக கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் கட்சித் தலைவர்கள் பட்டியலை அதிமுக கூட்டணிக் கட்சிகள் கொடுக்கவில்லை. இதனால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நான்கு தொகுதி


தேர்தல் பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் கட்சித் தலைவர்கள் பட்டியலை அதிமுக கூட்டணிக் கட்சிகள் கொடுக்கவில்லை. இதனால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நான்கு தொகுதி இடைத் தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்தாலும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பட்டியலில் பெயர் இல்லை: ஒவ்வொரு தேர்தலிலும் பிரசாரத்தின் போதும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் கோரும். கட்சிகளின் சார்பில் அளிக்கப்படும் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும். இந்த அனுமதியைப் பெற்றுள்ள தலைவர்களுக்குரிய தேர்தல் பிரசார செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளருடைய கணக்கில் சேர்க்கப்படாது. இதற்கான பெயர்ப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், அதிமுக மட்டுமே பெயர்ப் பட்டியலை அளித்து அனுமதி பெற்றுள்ளது. ஆனால், அதனுடைய கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் சார்பில் பெயர்ப் பட்டியல் அளிக்கப்படவில்லை. இதனால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தேர்தல் பிரசாரம் செய்யும் போது, அந்தத் தலைவர்களுக்குரிய பிரசார செலவுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com