ஓட்டப்பிடாரம்: எந்த காலத்திலும் மு.க. ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஒட்டபிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
அப்போது, தமிழகத்தில் 16 லட்சம் குடிசை பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் குறித்து கணக்கெடுத்து இன்று வரை 6 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசையில் வாழும் அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்து குடிசையே இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை என குறை சொல்ல முடியாது.
இந்த ஆட்சி இன்று கவிழ்ந்து விடும். நாளை கவிழ்ந்து விடும் என என ஜோதிடம் கூறுகின்றனர்.
எந்த காலத்திலும் மு.க. ஸ்டாலினால் முதல்வராக முடியாது. இந்தத் தோ்தலுக்கு அதிமுக காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறி வருகிறார்.
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தமிழக அரசியல் வரலாற்றில் 28 ஆண்டுகள் ஆளும் உரிமையை மக்கள் அதிமுகவுக்கு வழங்கியுள்ளனர். அதிமுகவின் 47 ஆண்டுகால வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்து தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை.
நெல் உற்பத்தியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் கிருஷிகர்மான் விருது பெற்றுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாட்டை நீக்க முடியாத நிலை இருந்தது. அதுதான் திமுகவின் சாதனை.
அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதிமுக அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது.
மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளிலும், 18 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.