
தமிழகத்தில் 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
3 எம்.எல்.ஏ.க்களுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. அதிமுக-வை உடைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த சதி இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. 3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. 22 பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்றால் எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். உள்ளத்தில் பயம் அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானம். ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம் நன்றாக தெரிகிறது. பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும்.
தமிழகத்தில் 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது.
தமிழகத்தில் கல்விப்புரட்சியால் மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் தில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை. திறமையின் அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தில்லியில் பணிபுரிகின்றனர்.
இயற்கை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...